தொழில் கசந்து தவிக்கும் தமிழகம்!


தொழில் கசந்து தவிக்கும் தமிழகம்!
x
தினத்தந்தி 20 July 2018 10:27 AM IST (Updated: 20 July 2018 10:27 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்ந்து சிந்தித்து பார்த்து, உடனடியாக தீர்வு காண வேண்டியதை வழக்கமான ஒரு செய்தியாக கடந்து வந்துவிட்டோம்.

ஆட்சியாளர்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ அது அறிக்கை கொடுக்க வேண்டிய பத்தோடு பதினொன்றான தகவலானது; அவ்வளவுதான். ‘என்னென்ன காரணங்கள்? எப்படி அவற்றைச் சரி செய்வது? அதற்கான செயல்திட்டம் என்ன?‘என்றெல்லாம் யோசிக்கக்கூட யாரும் தயாரில்லை. ஆமாம். அண்மையில் முடிவடைந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முன் வைக்கப்பட்ட அரசின் கொள்கைவிளக்கக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தத் தகவல் அத்தனை அதிர்ச்சிகரமானது.

“கடந்த 2016-17 ம் ஆண்டில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 ஆக இருந்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், 2017-18ம் நிதியாண்டில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 ஆக மாறியுள்ளது. கடந்த 2016-17ல் சிறு குறு தொழில் நிறுவனங்களில் 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் பணிபுரிந்து வந்துள்ளனர். 2017-18ல் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்துள்ளது“

வழக்கமான அரசாங்கத்து வார்த்தைகளில் நாசுக்காக பூசி, மெழுகி சொல்லப்பட்டிருக்கும் இந்த வரிகளின் ‘பளிச்‘ அர்த்தம் இதுதான்: ‘கடந்த ஓராண்டில் தமிழ்நாட்டில் 49,329 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. அதனால் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் தங்கள் வேலையை இழந்துள்ளனர்‘.

அரசே இப்படியொரு புள்ளிவிவரத்தை சட்டப்பேரவையில் தந்திருக்கிறது என்றால் உண்மை நிலவரம் அதைவிட மோசமாகவே இருக்கும் என்பது விவரமறிந்தவர்களுக்குப் புரியும். 5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் என்பது வெறும் எண்ணிக்கை அல்ல. அத்தனை லட்சம் குடும்பங்கள் தவித்து நிற்கின்றன என்று பொருள். நேரடியாக வேலையிழந்தோர் மட்டுமே இத்தனை பேர் எனில் ஒவ்வொரு தொழிலின் மூலம் மறைமுகமான வேலைவாய்ப்பினைப் பெற்றிருந்தோர் குறைந்தபட்சம் இதிலிருந்து இருமடங்கு எண்ணிக்கையிலாவது இருப்பார்கள். அவர்களது குடும்பங்களின் நிலைமையும் இதுதான்.

மூடப்பட்ட நிறுவனங்களின் நிலை இப்படி என்றால், இயங்கிக்கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களின் நிலைமையும் மோசமாகவே இருக்கிறது. அவர்களில் பலர் ஒவ்வொரு நாளும் வாழ்வா, சாவா போராட்டத்தில் தத்தளிக்கிறார்கள். பெரிய நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரித்து கொடுப்பவர்கள், ஜவுளி, ஆயத்த ஆடை, தோல் பொருட்கள், மின் பொருட்கள், பிளாஸ்டிக் என எல்லாவிதமான சிறு, குறு தொழில் செய்பவர்களும் சிக்கலில் இருக்கின்றனர். இந்த நிறுவனங்கள் 40 சதவீதம் அளவுக்கு செய்து வந்த ஏற்றுமதியிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

பெருநகரம், நகரம், பேரூர் என எந்தப்பகுதியில் தொழில் செய்பவர்களிடம் பேசினாலும் இதனை உணர முடிகிறது. எந்தளவுக்கு பாதிப்பின் வீரியம் இருக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம்: சென்னையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அமைப்பு ஒன்று ஆண்டுதோறும் தொழில், வணிகம் சார்ந்த விருதுகளை வழங்கி வருகிறது. அதில் வளர்ச்சிப்பாதையில் செல்லும் சிறு, குறு தொழில் நிறுவனத்தைத் தேர்வு செய்து மாநில அளவில் பாராட்டி பரிசளிப்பார்கள். இந்தாண்டு அந்த விருதுக்காக ஒரு நிறுவனத்தை அவர்களால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. ஆமாம் தமிழகத்தில் ஒரே ஒரு சிறு,குறு தொழில் நிறுவனம் கூட கடந்த ஆண்டில் இருந்து வளர்ச்சிப் பாதையில் செல்லவில்லை என்பதே இதற்கு காரணம்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதற்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய பாதிப்பைச் சரிசெய்யாவிட்டால் தொழில் என்பதே இங்கே கொடுங்கனவாக மாறிப்போய்விடும். மூடப்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களைத் தொழில் நோக்கி மீட்டு எடுப்பதற்கு சிறப்பு மானியங்களுடன் கடன் உதவி வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை இழந்த தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணத்தொகை வழங்கிட ஏற்பாடு செய்வதும் அரசுகளின் கடமை. எதனால் அவர்கள் தடுமாறியிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து சரி செய்ய உடனடியாக ஒரு குழுவை அமைத்து, ஓரிரு மாதங்களில் தீர்வுக்கான முயற்சிகளைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தற்போது தத்தளித்துக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கும் வழி கிடைக்கும்.

சிறு தொழில்களுக்கு மட்டும் பின்னடைவு என்றில்லை; பெரும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் தமிழகம் பின்தங்கி இருக்கிறது. இதனையும் கொள்கை விளக்கக்குறிப்பில் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. ‘2016-17ல் ரூ.36 ஆயிரத்து 221 கோடியாக இருந்த தொழில் முதலீடு 2017-18ம் நிதியாண்டில் ரூ.25 ஆயிரத்து 373 கோடியாக குறைந்துள்ளது‘ என்று சொல்லியிருக்கிறார்கள். அதாவது தமிழகத்தில் செய்யப்படும் தொழில் முதலீடு கடந்த ஓராண்டில் ரூ.10 ஆயிரத்து 848 ஆயிரம் கோடி குறைந்துள்ளது.

இதனை மெய்ப்பிக்கும் வகையில் மத்திய தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை வெளியிட்டிருக்கும் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டிற்கு 15- வது இடமே கிடைத்திருக்கிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் ஆந்திராவும், தெலுங்கானாவும் முதல் இரண்டு இடங்களைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. தொழிற்சாலைகள் நிறைந்த தமிழ்நாடு, முதல் பத்து இடத்திற்குள் வரமுடியாமல் போனது மட்டுமல்ல; தொழில் வளர்ச்சியில் எப்போதும் பின்தங்கியுள்ள உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு கீழே போயிருப்பது வேதனைக்குரியதாகும்.

தொழில் தொடங்க வருபவர்களை ஊக்குவித்து வரவேற்காமல், அதற்குரிய சூழலை உருவாக்கிடாமல் எல்லாவற்றிலும் லஞ்சமும், கமிஷனும் வாங்குவதிலேயே அதிகார வர்க்கம் குறியாக இருப்பதன் குறியீடுதான் இந்த வீழ்ச்சி. இவற்றைக் கவனித்து சரி செய்ய வேண்டிய இடத்தில் உள்ளவர்கள் எல்லாம் சரியாக இருக்கிறது‘ என்று சொல்லி கண்ணை மூடிக்கொண்டு கடந்து போகிறார்கள். 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன; 5 லட்சம் பேர் வேலை இழந்துவிட்டதாக சட்டப்பேரவையில் சொல்லிவிட்டு, வெளியில் வந்து தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று வாய் கூசாமல் பேசுகிறார்கள். தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். தூங்குவதைப் போல நடிப்பவர்களை என்ன செய்வது?!

- கோமல் அன்பரசன், ஊடகவியலாளர்

Next Story