குலசேகரன்பட்டினம் அருகே டிரைவர் கழுத்தை நெரித்து கொலை? வீட்டின் முற்றத்தில் தூங்கியவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்


குலசேகரன்பட்டினம் அருகே டிரைவர் கழுத்தை நெரித்து கொலை? வீட்டின் முற்றத்தில் தூங்கியவர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்
x
தினத்தந்தி 21 July 2018 3:30 AM IST (Updated: 21 July 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் அருகே வீட்டின் முற்றத்தில் படுத்து தூங்கிய டிரைவர் மறுநாள் காலையில் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட தடத்துடன் பிணமாக கிடந்தார்.

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் அருகே வீட்டின் முற்றத்தில் படுத்து தூங்கிய டிரைவர் மறுநாள் காலையில் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்ட தடத்துடன் பிணமாக கிடந்தார். அவர் மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் டிரைவர்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாண்டவன்காட்டைச் சேர்ந்த நாராயண பெருமாள் மகன் மகா செல்வன் (வயது 35). வாடகை கார் டிரைவரான இவர் வேலை இல்லாத நாட்களில் கூலி வேலைக்கும் செல்வது வழக்கம்.

இவர் பக்கத்து ஊரான சிறுநாடார்குடியிருப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கவிதாவை (33) கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் மகா செல்வன், சிறுநாடார்குடியிருப்பில் மனைவியின் வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ (6) என்ற மகளும், கவின்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர்.

கயிற்றால் இறுக்கிய தடம்

மகா செல்வன் தினமும் இரவில் தனது வீட்டின் முற்றத்தில் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவில் அவர் வழக்கம்போல் தனது வீட்டின் முற்றத்தில் படுத்து தூங்கினார். நேற்று அதிகாலையில் அவர் மர்மமான முறையில் தனது வீட்டின் முற்றத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் கயிற்றால் இறுக்கியதற்கான தடம் பதிந்து இருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கவிதா அலறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மர்மமான முறையில் இறந்த அவருடைய உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மகா செல்வனின் தாயார் பொட்டுக்கனி (60) அளித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனைக்கு பின்னரே அவர் எப்படி இறந்தார்? அவர் மர்மநபர்களால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story