மாணவர்கள் தங்களது முன்னேற்றத்துக்கு தொடர்ந்து கல்விகற்க வேண்டும், துணைவேந்தர் ராஜேந்திரன் பேச்சு


மாணவர்கள் தங்களது முன்னேற்றத்துக்கு தொடர்ந்து கல்விகற்க வேண்டும், துணைவேந்தர் ராஜேந்திரன் பேச்சு
x
தினத்தந்தி 20 July 2018 10:15 PM GMT (Updated: 20 July 2018 7:27 PM GMT)

மாணவர்கள் தங்களது முன்னேறத்துக்கு தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் என்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2018–19–ம் கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதுகலை முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி விழா நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் குருமல்லேஷ்பிரபு வரவேற்றார். விழாவிற்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசியதாவது:– அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகளை அறிந்து கொண்டு அதன் மூலம் தங்களைமேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்வதே இந்த புத்தாக்க பயிற்சியின் நோக்கம் ஆகும்.

அழகப்பா பல்கலைக்கழகம் தேசிய தர நிர்ணயக் குழுவின் மூன்றாவது சுற்று தர மதிப்பீட்டில் அதிக புள்ளிகள் பெற்று தமிழக பல்கலைக்கழகங்களில் முன்னோடி பல்கலைக்கழகமாக இருப்பதோடு அகில இந்திய அளவில் அரசு பல்கலைக்கழகங்களில் 2–வது இடத்தைப் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் மிகவும் பின் தங்கிய பகுதியில் அமைந்தாலும் உயர்கல்வி துறையில் இந்திய அளவில் சிறந்த இடத்தை பெற்றுள்ளது.

ஒரு கல்வி நிறுவனம் சிறந்த நிறுவனமாக எப்போது கருதப்படும் என்றால் அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தரத்தைப் பொறுத்தே கருதப்படும்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் பணி செய்தால் அந்த நிறுவனம் நிச்சயம் உயர்ந்த நிலையை அடையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அழகப்பா பல்கலைக்கழகம் ஏற்கனவே பெற்றுள்ள யூ தகுதியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து தங்களது பங்களிப்பை தரவேண்டும்.

இயற்கையாகவே மாணவர்களிடம் பல்வேறு திறன்கள் உள்ளன. அவற்றை வெளிக்கொண்டு வர ஆசிரியர்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். படிப்பு என்பது தேர்வுக்காக படிப்பதும், கற்றல் என்பது வாழ்க்கைக்காக படிப்பது ஆகும். மாணவர்கள் தங்களது முன்னேற்றத்திற்காக தொடர்ந்து கல்வி கற்க வேண்டும். பாடம் சார்ந்த மற்றும் பாடத்தோடு தொடர்புடைய பிற செயல்பாடுகளிலும் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தினந்தோறும் கட்டாயமாக யோகா பயிற்சி மேற்கொண்டால் தங்களது உடல் நலமும் மன நலமும் சீராக இருப்பதோடு கல்வியை சிறப்பாக கற்க முடியும். மாணவர்கள் தாங்கள் கல்வி கற்ற சமுதாயத்திலும் மற்றும் படைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய தளத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொண்டு தங்களை அதற்கு ஏற்றாற்போல் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கலைப்புலம் முதன்மையர் மணிமேகலை, அறிவியல் புலம் முதன்மையர் பரிதிமாற்கலைஞன், கல்வியியல் புல முதன்மையர் தர்மலிங்கம், மைய நூலகர் முனைவர் திருநாவுக்கரசு, தன்னார்வ படிக்கும் வட்ட இயக்குனர் சுரேஷ்குமார், முனைவர்கள் மதன், மகேஷ், சரோஜா, பாஸ்கரன் மற்றும் 677–க்கும் மேற்பட்ட முதுகலை முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் துறைகளைச் சார்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் முனைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.


Next Story