உடல் உறுப்பு தானம் வழங்குவதில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது கவர்னர் பெருமிதம்


உடல் உறுப்பு தானம் வழங்குவதில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது கவர்னர் பெருமிதம்
x
தினத்தந்தி 22 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

உடல் உறுப்பு தானம் வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மையாக உள்ளதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முனைப்பு திட்டமான, ‘வாழ்க்கைக்கான வாக்குறுதி’ என்ற திட்ட தொடக்க விழா நேற்று காலை சங்கம் ஓட்டலில் நடந்தது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி வைத்து இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். காவேரி ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனர் எஸ்.சந்திரகுமார் வரவேற்று பேசினார். அவர் சிறுநீரக நோய்க்கான விளக்கம் மற்றும் அதன் சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

உடல் உறுப்பு தானம் என்பது ஒரு நபரின் உடல் பாகம் நீக்கப்பட்டு, சட்டப்பூர்வமாக உயிருடன் இருக்கும்போதோ அல்லது இறந்த பின்னர் உறவினர்கள் அனுமதியுடனோ செய்யப்படுவதாகும். இந்த தானமானது ஆராய்ச்சிக்காகவோ அல்லது பிற நபர்களுக்கு பொருத்துவதற்காகவோ இருக்கலாம். பொதுவாக சிறுநீரகம், இதயம், கல்லீரல், கணையம், குடல், நுரையீரல், எலும்பு மஜ்ஜை, தோல் போன்றவை தானம் செய்யப்படுகிறது.

நமது நாட்டில் புள்ளிவிவரப்படி, 1 லட்சம் பேர் கல்லீரல் பாதிப்பால் அவதிப்படுகின்றனர். இவர்களில் 1,000 பேருக்கு தான் கல்லீரல் கிடைத்துள்ளது. உடல் உறுப்புகள் கிடைக்காமல் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் சிறுநீரக மாற்று உறுப்புக்காக காத்திருந்ததில் 15 ஆயிரம் பேருக்குத்தான் அவை கிடைத்துள்ளது. 10 லட்சம் பேர் மாற்று கண் கிடைப்பதற்காகவும், 50 ஆயிரம் பேர் இருதயத்திற்காகவும், 20 ஆயிரம் பேர் மாற்று நுரையீரலுக்காகவும் காத்திருக்கிறார்கள்.

உடல் உறுப்பு தானம் தொடர்பாக மக்களின் மனோநிலையை மாற்ற வேண்டிய தேவை உள்ளது. இதை தனிப்பட்ட ரீதியிலும், அமைப்பு ரீதியிலும் செய்ய வேண்டும். அதேபோல நாம், நம் உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவரையும் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும். இதுகுறித்து நாம் தொடர்ந்து பேச வேண்டும்.

மருத்துவ ஆய்வு மற்றும் சிகிச்சையின் ஒரு முக்கிய மையமாக தமிழ்நாடு எப்போதுமே உள்ளது. இது பொது சுகாதார சட்டத்தை இயற்றிய முதல் மாநிலமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாது, இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக உடல் உறுப்பு தான உறுதிமொழியை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் இருந்து காவேரி ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் நிர்வாக இயக்குனர் டாக்டர் சந்திரகுமார், இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் மணிவண்ணன் ஆகியோர் பெற்று கொண்டனர். பின்னர் சிறுநீரக நலன் காப்போம் என்ற கையேட்டினையும் அவர் வெளியிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் முத்துராமன், பெப்பின், மதுமலர், ஆல்பர்ட், ஆண்ட்ரோஸ் ஆகியோர் விபத்து மற்றும் மூளைச்சாவு ஏற்பட்டு அவர்களது உடல் உறுப்புகளை பெற்றோர் மற்றும் உறவினர்கள் தானம் செய்துள்ளனர். தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். சான்றிதழ்களை சிலர் கண்ணீருடன் மேடையில் பெற்றுக்கொண்டபோது, அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர். முடிவில் காவேரி ஆஸ்பத்திரி செயல் இயக்குனர் டாக்டர் செங்குட்டுவன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் செந்தில்குமார், ராஜராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story