திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருநீறு பூசி, வெள்ளை நிறத்தில் யானை வீதி உலா


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருநீறு பூசி, வெள்ளை நிறத்தில் யானை வீதி உலா
x
தினத்தந்தி 22 July 2018 3:30 AM IST (Updated: 22 July 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருநீறு பூசி, வெள்ளை நிறத்தில் யானை வீதி உலா சென்றது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருநீறு பூசி, வெள்ளை நிறத்தில் யானை வீதி உலா சென்றது.

சுப்பிரமணிய சுவாமி கோவில்

ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமானுக்கு கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம். இதனை நினைவுகூறும் வகையில், ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடந்தது.

மாலையில் கோவில் யானையான தெய்வானை யானையின் உடல் முழுவதும் திருநீறு பூசி, வெள்ளை நிறத்தில் காட்சி அளித்தது. தொடர்ந்து வெள்ளை நிறத்தில் காட்சி அளித்த தெய்வானை யானையும், 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவிலில் இருந்து புறப்பட்டு, சன்னதி தெரு வழியாக உள்மாட வீதி மற்றும் ரத வீதிகளில் உலா வந்து மீண்டும் கோவிலை சென்றடைந்தனர்.

வெள்ளை நிறத்தில் யானை வீதி உலா

பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் இருந்து வெள்ளை நிற தெய்வானை யானை முன் செல்ல, சேரமான் பெருமானும், மாணிக்கவாசகரும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி, யானையின் பின்னால் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.


Next Story