கூடலூரில் 12 ஆயிரம் லிட்டர் டீசலுடன் வந்த லாரி சக்கரத்தில் திடீர் தீ


கூடலூரில் 12 ஆயிரம் லிட்டர் டீசலுடன் வந்த லாரி சக்கரத்தில் திடீர் தீ
x
தினத்தந்தி 22 July 2018 3:30 AM IST (Updated: 22 July 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் 12 ஆயிரம் லிட்டர் டீசலுடன் வந்த டேங்கர் லாரியின் சக்கரத்தில் திடீர் தீ பிடித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் பெட்ரோல், டீசல் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெரும்பாலும் கோவையில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இதனால் தினமும் ஏராளமான லாரிகளில் கோவையில் இருந்து கூடலூர் பகுதிக்கு இயக்கப்படுகிறது. நேற்று காலை 7.30 மணிக்கு கரூரில் இருந்து ஒரு டேங்கர் லாரி 12 ஆயிரம் லிட்டர் டீசலுடன் ஊட்டி வழியாக கூடலூருக்கு வந்து கொண்டிருந்தது.

லாரியை கரூரை சேர்ந்த டிரைவர் செல்வம் ஓட்டினார். அப்போது கூடலூர் சக்தி விநாயகர் கோவில் முன்பு டேங்கர் லாரி வந்த போது அதன் பின்பக்கம் இடதுபுற சக்கரத்தில் திடீரென தீ பிடித்தது. இருப்பினும் லாரி டிரைவர் அதை அறிய வில்லை. இதனால் லாரியை டிரைவர் தொடர்ந்து ஓட்டியவாறு பழைய பஸ் நிலையத்தை அடைந்தார்.

அப்போது பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் சுரேஷ் மற்றும் பொதுமக்கள் லாரியின் சக்கரத்தில் தீ பரவுவதை கண்டு நிறுத்தினர். இதனால் பழைய பஸ் நிலையத்தை கடந்தவாறு சென்ற டேங்கர் லாரி மெயின் ரோட்டில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தகவலின் பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) அனில் குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து லாரியின் சக்கரத்தில் இருந்த தீயை அணைத்தனர். இதனால் தீ அணைந்தது. இருப்பினும் புகை வந்தவாறு இருந்தது. இதனால் டேங்கர் லாரியின் அடிப்பாகம் முழுவதும் தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.

பின்னர் லாரியில் இருந்து புகை எதுவும் வர வில்லை. உரிய நேரத்தில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டேங்கர் லாரியில் இருந்த தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நகர பகுதியில் போக்குவரத்து இயக்கப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறை (பொறுப்பு) அலுவலர் அனில்குமார் கூறியதாவது:–

மலைப்பாதையில் வாகனங்களை 2–வது கியரில் மட்டுமே இயக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. கரூரில் இருந்து கூடலு£ருக்கு 12 ஆயிரம் லிட்டர் டீசலுடன் வந்த டேங்கர் லாரியிலும் பிரேக்கை அதிகளவு பயன்படுத்தியவாறு ஓட்டி வந்ததால் தீ பிடித்துள்ளது. அதிர்ஷ்டவசமாக தீ அணைக்கப்பட்டு விட்டது. இல்லை எனில் கூடலு£ர் நகரில் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story