அனைத்து பிரிவினருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கர்நாடகத்தில் மாணவ–மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
அனைத்து பிரிவினருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கர்நாடகம் முழுவதும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
அனைத்து பிரிவினருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கர்நாடகம் முழுவதும் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலவச பஸ் பாஸ்கர்நாடகத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவுகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால் அனைத்து பிரிவை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் அனைத்து பிரிவு மாணவ–மாணவிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெறுவதால், அனைத்து பிரிவு மாணவ–மாணவிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று மாணவ அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால் நிதி நிலைமையை காரணம் காட்டி இலவச பஸ் பாஸ் வழங்கப்படவில்லை. மாறாக அரசு சார்பில் 75 சதவீத நிதி வழங்கப்படும் என்றும், மீதி 25 சதவீதத்தை மாணவ, மாணவிகள் கட்டணமாக செலுத்தி இலவச பஸ் பாஸ் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள் அடைப்புஇதற்கு மாணவ அமைப்புகளும், மாணவ–மாணவிகளின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் அனைத்து பிரிவுகளை சேர்ந்த மாணவ–மாணவிகளுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 21–ந் தேதி (அதாவது நேற்று) பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு மாணவ அமைப்புகள் அறிவித்தன. அதன்படி, இலவச பஸ் பாஸ் வழங்க கோரி நேற்று மாநிலம் முழுவதும் மாணவ–மாணவிகள் பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்படவில்லை. பெங்களூரு மகாராணி கல்லூரி உள்பட முக்கிய கல்லூரிகள் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கல்லூரிகள் அடைக்கப்பட்டன. அதுபோல, மைசூரு, வடகர்நாடக மாவட்டங்கள், தாவணகெரே, துமகூரு உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில பள்ளிகள், கல்லூரிகள் அடைக்கப்பட்டு இருந்தது.
வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்அதே நேரத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பெங்களூரு டவுன்ஹால் முன்பாக இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்காக மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்காமல் இருப்பதாக மாணவ அமைப்புகளை சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டு கூறினார்கள். பெங்களூரு தவிர பிற மாவட்டங்களிலும் மாணவ, மாணவிகள் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் இலவச பஸ் பாஸ் வழங்கவில்லை எனில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவ அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.