சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை வைக்கப்படும் அமைச்சர் தகவல்


சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை வைக்கப்படும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 22 July 2018 4:45 AM IST (Updated: 22 July 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை வைக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் உள்ள 8 மொழிகளுக்கான பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டும் வகையில் முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம். மொழி சார்ந்த பல்கலைக்கழகத்தை தொடங்க வேண்டும் என்ற சித்தாந்தத்தால் தமிழ்ப்பல்கலைக்கழகத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார்.

நீதித்துறையில் இருந்து தமிழ் வளர்த்தவர்கள் எண்ணற்றவர்கள். தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் தனித்தன்மையை மீட்டெடுப்போம் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தார்.

இதை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு திட்டங்கள் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழ் வளர் மையம், தமிழ்ப்பண்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தி பிரசார சபையை போன்று தமிழ் வளர் மையம் தமிழ்மொழியை வளர்க்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு 32 கோடி பேர் இந்தி மொழி பேசி வந்தனர். இந்தி பிரசார சபை மூலம் இப்போது 52 கோடி பேர் பேசும் மொழியாக உயர்ந்துள்ளது. இதுபோன்ற முயற்சியாக தமிழ் வளர் மையம் பிற மாநிலங்களில் 10 இடங்களிலும், வெளிநாடுகளில் 16 இடங்களிலும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 10 லட்சம் பேர் பயன்பெற வேண்டும் என்பது எண்ணம். இதற்கான முழு முயற்சியை தமிழ்ப்பல்கலைக்கழகம் செய்யும்.

மேலும் இசை, நடனம் பயிலக்கூடிய மாணவர்களுக்கு தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கும் விதமாக தமிழ்ப்பண்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் இதுவரை 30 ஆயிரம் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் மாணவர்களை ஒருங்கிணைக்க முடியும் என நம்புகிறேன். இந்த திட்டங்கள் மூலம் தேசிய தர நிர்ணயக்குழுவின் முதல் தர சான்று பெற்று விடுவோம்.

இந்த சான்று பெற வேண்டும் என்பதற்காக தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் இப்பல்கலைக்கழகத்தில் அகராதி சார்ந்த இணைச்சொல், எதிர்சொல், சொல் செயலி போன்றவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக சொற்குவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை இயங்க தொடங்கி விட்டது. இதேபோல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜோகனஸ்பர்க் பல்கலைக்கழகம், மலேயா பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இந்த ஆண்டு தமிழ் ஆய்வு இருக்கை தொடங்கப்பட உள்ளது.

தமிழின் தொன்மையை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக்க யுனெஸ்கோவின் உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை திருக்குறளுக்கு பெற்று தர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் ஆய்வு மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் இணையவாசல் உருவாக்கப்பட உள்ளது. தமிழுக்கு 63 மாநில அரசு விருதுகளும், 8 மத்திய அரசு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தொல்காப்பியருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை வைக்கப்படும். தமிழ்ப்பல்கலைக்கழகத்தை உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 100 இடங்களுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறுஅவர் பேசினார். 

Next Story