லாரிகள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: குமரி மாவட்டத்தில் ரூ.1½ கோடி பொருட்கள் தேக்கம்


லாரிகள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: குமரி மாவட்டத்தில் ரூ.1½ கோடி பொருட்கள் தேக்கம்
x
தினத்தந்தி 22 July 2018 4:30 AM IST (Updated: 22 July 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் 2-வது நாளாக நேற்று நடந்தது. இதனால் குமரி மாவட்டத்தில் ரூ.1½ கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்தன.

நாகர்கோவில்,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும், பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டிப்பதோடு அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

நேற்று 2-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய லாரிகள் நாகர்கோவில் அனாதை மடம் மைதானம், கோட்டார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள லாரி நிறுத்தங்களிலும், லாரி உரிமையாளர்களின் சொந்த இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

வேலை நிறுத்தத்தால் குமரியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்லப்படும் பொருட்கள் தேக்கம் அடைந்தன. லாரி புக்கிங் ஏஜெண்டுகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் புக்கிங் அலுவலகத்தில் சரக்குகளுக்கான புக்கிங் எதுவும் நடைபெறவில்லை. இதனால் உற்பத்தியாளர்கள் குடோன்களிலேயே தேங்காய், தும்பு, ரப்பர் ஷீட், ரப்பர் பால், ரப்பர் மர தடிகள் போன்றவை தேங்கி கிடக்கின்றன.

அதே நேரத்தில் உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, பழ வகைகள், மளிகை பொருட்கள், பெட்ரோல்- டீசல் உள்ளிட்டவற்றை ஏற்றி செல்லும் லாரிகள் வழக்கம் போல் இயங்கின. கேரளாவுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இதுதொடர்பாக குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மனோகரன் கூறியதாவது:-

வெளிமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் குமரி மாவட்டத்தை சேர்ந்த 1500 லாரிகள் 2-வது நாளாக நேற்றும் இயக்கப்படவில்லை. இதனால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அதிகப்படியாக ஏற்றிச் செல்லப்படும் தேங்காய், ரப்பர்ஷீட், ரப்பர்பால், ரப்பர் மர தடிகள், தும்பு, சாமிதோப்பு பகுதியில் உள்ள உப்பளங்களில் இருந்து கொண்டு செல்லப்படும் உப்பு போன்ற பொருட்கள் கடந்த 2 நாட்களில் ரூ.1½ கோடி மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தியாளர்கள் குடோன்களில் தேங்கி கிடக்கின்றன.

இவ்வாறு மனோகரன் கூறினார். 

Next Story