லாரி திருட்டு வழக்கில் மேலும் 2 பேர் கைது
கிருமாம்பாக்கத்தில் லாரி திருட்டு வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்,
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் நல்லரசன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 36). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு டைல்ஸ் கடையில் லோடு ஏற்றுவதற்காக புதுச்சேரி – கடலூர் சாலையோரம் சக்கரவர்த்தி லாரியை நிறுத்திவிட்டு, கடை மேலாளரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால் லாரியை காணவில்லை. இதையடுத்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சக்கரவர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம் மேற்பார்வையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் தன்வந்தரி, தமிழரசன் மற்றும் தெற்கு பகுதி குற்றப்பிரிவு போலீசார் அம்பேத்கர், சிவக்குமார், ரஞ்சித், ரோமன், ஜெயமணி, சிரஞ்சீவி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் லாரியை தீவிரமாக தேடினர். மேலும் கடத்தப்பட்ட லாரி குறித்து புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட எல்லையில் உள்ள போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் கடலூர் அருகே சாவடி பகுதியில் அந்த லாரி நிற்பதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது லாரியில் டயரை கழற்றிக்கொண்டிருந்த ஒருவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர், பாகூர் புதிய காமராஜர் நகரை சேர்ந்த குமரகுரு என்கிற குரு (30) என்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையின்போது குமரகுரு அளித்த வாக்குமூலத்தில், புதுவை உருளையன்பேட்டையை சேர்ந்த அலாதீன் (26) என்பவருடன் இணைந்து, லாரியை கடத்தி, அதன் டயர்களை கழற்றி, மற்றொரு லாரி உரிமையாளரான கடுவனூர் நிர்மல்ராஜ் என்கிற விமல் (33) என்பருக்கு விற்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அலாதீன், நிர்மல்ராஜ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான லாரி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லாரி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.