பாளையங்கோட்டையில் வியாபாரியை வழிமறித்து ரூ.1½ லட்சம் கொள்ளை அடுத்தடுத்த சம்பவங்களால் பொது மக்கள் பீதி


பாளையங்கோட்டையில் வியாபாரியை வழிமறித்து ரூ.1½ லட்சம் கொள்ளை அடுத்தடுத்த சம்பவங்களால் பொது மக்கள் பீதி
x
தினத்தந்தி 23 July 2018 5:11 AM IST (Updated: 23 July 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் வியாபாரியை வழிமறித்து ரூ.1½ லட்சம் பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் வியாபாரியை வழிமறித்து ரூ.1½ லட்சம் பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்

பாளையங்கோட்டை கோரிப்பள்ளம் புதிய மாத்யூ நகரை சேர்ந்தவர் பொன்ராஜ். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், நேற்று முன்தினம் தன்னுடைய மனைவி வசந்தா (வயது 58) உடன் பாளையங்கோட்டை பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.2 லட்சம் எடுத்தார். அதனை பொன்ராஜ் தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு அங்குள்ள கடைக்கு டீ குடிக்க சென்றார். மோட்டார் சைக்கிள் அருகில் வசந்தா நின்று கொண்டிருந்தார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வசந்தா அருகில் வந்து ஆஸ்பத்திரிக்கு செல்ல முகவரி கேட்பது போல் நடித்து பெட்டியில் இருந்த ரூ.2 லட்சத்தை நைசாக திருடிச் சென்று விட்டனர்.

வியாபாரியிடம் கைவரிசை

அதே போல் வியாபாரியிடமும் ரூ.1½ லட்சத்தை கொள்ளையர்கள் பறித்து சென்று விட்டனர். நெல்லை மாவட்டம் பொட்டல்புதூரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவர் பாளையங்கோட்டை மார்க்கெட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இதற்காக அவர் பாளையங்கோட்டை ரகுமத் நகரில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சக்கரவர்த்தி வியாபாரத்தை முடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ரூ.1½ லட்சத்தை பையில் வைத்திருந்தார். சமாதானபுரத்தை கடந்து கோர்ட்டு அருகே சென்ற போது பின் தொடர்ந்து 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சக்கரவர்த்தியை வழிமறித்து முகவரி கேட்பது போல் நடித்து பேசினர். பின்னர் எதிர்பாராத நேரத்தில் சக்கரவர்த்தியிடம் இருந்த ரூ.1½ லட்சத்தை பறித்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்று விட்டனர்.

வலைவீச்சு

இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டையில் அடுத்தடுத்த இடங்களில் பணம் திருட்டு, வழிப்பறி சம்பவங்களால் இரவு நேரத்தில் ரோட்டில் செல்வதற்கு பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


Next Story