5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது 80 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை


5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது 80 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 July 2018 4:45 AM IST (Updated: 24 July 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் எதிரொலியாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதையொட்டி கடந்த 2 வாரங்களாக அந்த அணைகளில் இருந்து தண்ணீர் அதிகளவில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லை வந்தடைந்தது. வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர்வரத்தால் ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்ததால் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 118 அடியாக நேற்று முன்தினம் உயர்ந்தது. அப்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் கனஅடி என்ற அளவில் இருந்தது. இதன் எதிரொலியாக அணையில் இருந்து அன்று இரவு உபரி நீர்போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 7,500 கனஅடி தண்ணீரும், நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும் என மொத்தம் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டது.

இருப்பினும் அணைக்கு நீர்வரத்து தண்ணீர் திறப்பை விட அதிகமாக இருந்ததால் நேற்று காலை 8 மணிக்கு நீர்மட்டம் 119.41 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 68 ஆயிரத்து 489 கனஅடியாகவும் இருந்தது. இந்த நிலையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, நேற்று பகல் 12 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் 84 ஆண்டுகால வரலாற்றில் 39-வது ஆண்டாக அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. கடைசியாக 2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய பிறகு 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அணை நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் செந்தில்குமார் தலைமையில் அணையின் வலது கரை பகுதியில் சிறப்பு பூஜை நடந்தது. இந்த பூஜையில் எம்.எல்.ஏ. செம்மலை, பொதுப்பணித்துறையின் மேட்டூர் நிர்வாக பொறியாளர் தேவராஜன், உதவி நிர்வாக பொறியாளர் திருமூர்த்தி, அணை பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன், மேட்டூர் நகரசபை முன்னாள் தலைவர் லலிதா சரவணன், முன்னாள் துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், மேட்டூர் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர்போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 56 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரும், நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும் மற்றும் கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 1,000-ம் கனஅடி என மொத்தம் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கும் அளவு நேற்று இரவு 10 மணியளவில் அதிகரிக்கப்பட்டது. 16 கண் பாலம் வழியாக தண்ணீர் வெளியேறும் கண்கொள்ளா காட்சியை அதன் அருகே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் இருந்து பொதுமக்கள் ரசித்து செல்வதை காணமுடிந்தது. இந்த நிலையில் கூடுதல் நீர் திறப்பு எதிரொலியாக, இந்த புதிய பாலத்தில் கனரக வாகனங்கள் போக்குவரத்து மாலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் மற்றும் பாசன தேவைக்கு வினாடிக்கு 80ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருவதால் காவிரி பாய்ந்தோடும் 12 மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்கி குளிப்பது, நீச்சல் அடிப்பது, நீர்நிலை அருகில் சென்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையொட்டி கரையோர கிராமங்களில் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் தண்டோரா அறிவிப்பு செய்தும், கரையோர கிராமங்களில் பொதுமக்கள் நீர்நிலையில் இறங்காமல் இருப்பதை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story