பவானி அருகே ஜம்பையில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


பவானி அருகே ஜம்பையில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 July 2018 4:07 AM IST (Updated: 24 July 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே ஜம்பையில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டஅரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

பவானி அருகே ஜம்பை பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

ஜம்பையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகிறார்கள். அங்கு டாஸ்மாக் கடை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜம்பையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கூடம், கோவில்கள் உள்ளன. இதனால் மாணவ–மாணவிகள் உள்பட அனைவருக்கும் பெரும் இடையூறு ஏற்படும். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும்.

எனவே ஜம்பை பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில், ‘‘சித்தோடு ஐ.ஆர்.டி.டி. என்ஜினீயரிங் கல்லூரிக்கு பின்புறம் அரசுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று கடந்த 2014–ம் ஆண்டு முதல்–அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம். இந்த நிலையில் விளையாட்டு மைதானம் அமைக்க தமிழக அரசுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகின. எனவே பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளின் நலன் கருதி உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானத்தை அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறி இருந்தனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர் கொடுத்த மனுவில், ‘‘ஈரோட்டில் சுற்றுச்சாலை அமைக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கரூர் ரோட்டில் இருந்து பூந்துறை ரோடு, ரங்கம்பாளையம் வழியாக பெருந்துறை ரோடு வரை அமைக்கப்படுகிறது. இதில் பூந்துறைரோடு, சென்னிமலைரோடு ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிலுவையில் உள்ளன. இந்த பணிகளை முடித்து சுற்றுச்சாலையை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறி இருந்தார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு தலைமையில் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘‘கர்நாடகா, கேரளா மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளது. அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. எனவே பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம், ஏரிகளில் குழாய் மூலமாக கொண்டு வந்து தண்ணீரை நிரப்ப வேண்டும். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும்’’, என்று கூறப்பட்டு இருந்தது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் துரை ராஜா தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில், ‘‘பவானி அருகே மயிலம்பாடி இரட்டைக்கரடு பகுதியில் தனியார் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பால் பண்ணையின் கழிவுநீர் ஆழ்துளை கிணறு வழியாக நிலத்தடிக்குள் அனுப்பப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளின் நிலத்தடிநீர் மாசடைகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பவானி தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த பால் பண்ணையில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறிஇருந்தனர்.

நம்பியூர் தாலுகா கரட்டுப்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்த ரங்கபோயன் என்பவர் கொடுத்த மனுவில், ‘‘நானும், எனது சகோதரிகளும் அனுபவித்து வரும் சொத்தை பிரித்து எடுத்து கொள்ள முடிவு செய்தோம். இதற்கான சிட்டா சான்று வாங்குவதற்காக, கிராம நிர்வாக அதிகாரியிடம் சென்று கேட்டேன். அப்போது அவர் ரூ.1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்கிறார். நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. எனவே எங்களுக்கு சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’, என்று கூறிஇருந்தார்.

பெருந்துறை தாலுகா புங்கம்பாடி வேமங்காட்டு பகுதியை சேர்ந்த சேப்பெருமாளின் மனைவி பவுனாயாள் தனது குடும்பத்துடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர், ‘‘எனது கணவர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் கடன் வாங்கினார். அந்த பணத்தை திருப்பி செலுத்துவதற்கு, எங்களுக்கு சொந்தமான வீட்டை தனியார் வங்கியில் அடமானம் வைத்தால் ரூ.8 லட்சம் கடன் கிடைக்கும் என்று நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறினார்கள். அவர்களை நம்பி நாங்களும் வீட்டை அடமானம் வைத்தோம். ஆனால் எங்களுக்கு வரவேண்டிய ரூ.8 லட்சத்தை நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஏமாற்றி அபகரித்து விட்டனர். தற்போது வங்கியின் சார்பில் எங்களது வீடு ஏலத்தில் விடப்போவதாக கூறிஉள்ளனர். எனவே நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டு தர வேண்டும்’’, என்று கூறிஇருந்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ரபீக், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அகற்றப்பட்ட காமராஜர் உருவப்படத்தை மீண்டும் வைக்கக்கோரியும், மக்கள் மன்ற அமைப்பாளர் செல்லப்பன், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக்கோரியும், ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை நலச்சங்க தலைவர் ராஜரத்தினம், 100 நாட்கள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு அளிக்கக்கோரியும், ஈரோடு கணபதிபாளையம் புஞ்சைகாளமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கொடுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரியும் மனு கொடுத்தனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மொத்தம் 214 மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். கூட்டத்தில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


Next Story