சொத்துவரி உயர்வினை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


சொத்துவரி உயர்வினை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 July 2018 4:15 AM IST (Updated: 25 July 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

சொத்துவரி உயர்வினை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்,

கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தர்மபுரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், பா.ஜ.க.வின் கரூர் பாராளுமன்ற பொறுப்பாளர் பார்த்திபன், கரூர் பாராளுமன்ற அமைப்பாளர் சிவசாமி ஆகியோர் கலந்து கொண்டு சொத்துவரி உயர்வினால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து எடுத்துரைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்பப்பெற வேண்டும்.

பழைய முறைப்படியே வரிவசூலிக்க வேண்டும். மேலும் கரூர் லைட்அவுஸ் கார்னர் அருகே, பழைய பைபாஸ் ரோடு, மாவட்ட மைய நூலக சாலை, செங்குந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் சரிவர அகற்றப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ளது. ஆனால் வீட்டுக்கு ரூ.60 என குப்பை வரியை கரூர் நகராட்சி நிர்வாகம் வசூலிக்கின்றனர். எனவே கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சீராக அகற்ற வேண்டும். தெருவிளக்கு பழுது தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நகராட்சி கழிவுநீர் வடிகாலை மாதத்திற்கு 2 முறையாவது தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர் நகராட்சி நிர்வாக சீர்கேட்டினை கண்டித்து பா.ஜ.க.வினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட பொது செயலாளர்கள் நகுலன், கிருஷ்ணமூர்த்தி, மகளிர் அணி தலைவி சித்திரைசெல்வி, முன்னாள் மாவட்ட தலைவர் மதுக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் செல்வன் நன்றி கூறினார். 

Next Story