வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தம்


வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தம்
x
தினத்தந்தி 24 July 2018 11:30 PM GMT (Updated: 24 July 2018 7:47 PM GMT)

முழு அடைப்பு காரணமாக வேலூரில் இருந்து நேற்று ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

வேலூர்,

ஆந்திர மாநில சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை பேசவிடாததை கண்டித்தும், தேர்தலின் போது முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்தும், ஆந்திர மாநிலத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு சிறப்பு நிதி, சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நேற்று ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக பஸ்கள் ஓடவில்லை. இதனால் வேலூரில் இருந்து சித்தூர், திருப்பதி பகுதிகளுக்கு செல்லும் தமிழக அரசு பஸ்கள் நேற்று காலை 6 மணி முதல் நிறுத்தப்பட்டது. அதேபோன்று அங்கிருந்து வேலூருக்கு வரும் ஆந்திர மாநில அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களும் வரவில்லை.

இதனால் வேலூர் பஸ் நிலையத்தில் ஆந்திர மாநில அரசு பஸ்கள், தனியார் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 10 மணிக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு, போராட்டத்தின் தீவிரம் குறைந்தது. இதனால் 10 மணிக்கு பிறகு ஒரு சில ஆந்திர மாநில அரசு பஸ்கள் மட்டும் வேலூரில் இருந்து புறப்பட்டு சென்றன.

ஆனால் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் வேலூர் வழியாக திருப்பதி செல்லும் பக்தர்கள் ரெயில் மூலம் செல்ல காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றனர். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. மதியத்திற்கு பிறகு தமிழக அரசு பஸ்களும் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டன.

Next Story