திருப்பூர், காங்கேயத்தில் சாயக்கழிவுநீரை கொண்டு சென்ற 3 லாரிகளின் உரிமம் ரத்து, கலெக்டர் நடவடிக்கை
திருப்பூர் முதலிபாளையம், காங்கேயத்தில் கொட்டுவதற்காக சாயக்கழிவுநீரை கொண்டு சென்ற 3 லாரிகளின் உரிமத்தை ரத்து செய்து, கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரங்களிலும், சங்கிலி பள்ளம் ஓடை, வீரபாண்டி ஓடை, ஜம்மனை ஓடை, சின்னக்கரை ஓடை, நல்லாறு ஓடை மற்றும் பிற நீர்நிலைகளின் கரையோரங்களிலும், சாலையோரங்களிலும், பொது இடங்களிலும் பாய்லர் சாம்பல், சாயக்கழிவுநீர், பின்னலாடை நிறுவன கழிவுகள், பிரிண்டிங் கழிவுகள், பேக்கேஜிங் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசுபடுகிறது. சில நேரங்களில் இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுகள் சமூக அக்கறை இல்லாத விஷமிகளால் தீவைக்கப்படுகிறது.
இதனால் காற்று மாசுபடுகிறது. இவ்வாறு திடக்கழிவுகளை கொட்டும் தனி நபர்கள், வாகனங்கள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், இறைச்சி கூடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் விடுதிகள் மீது நீர் மற்றும் காற்று தடுப்பு சட்டங்களின் மூலமாகவும், உள்ளாட்சி விதிகளின் மூலமாகவும், மோட்டார் வாகன சட்டத்தின் மூலமாகவும், போலீசார் மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருப்பூர் வடக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பின் மூலம் திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள நிலத்தில் குழி தோண்டி சாயக்கழிவுநீர் முறைகேடாக வெளியேற்றப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து முறைகேடாக சாயக்கழிவை வெளியேற்றிய மண்ணரையில் உள்ள அந்த சாய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், சாயக்கழிவுநீரை கொண்டு சென்ற 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அதன் உரிமத்தையும் கலெக்டர் ரத்து செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் தெற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் காங்கேயம் குட்டப்பாளையம் நொய்யல் ஆற்றின் அருகே சாயக்கழிவுநீரை கொண்டு சென்று வெளியேற்றிய லாரியை பறிமுதல் செய்து, அதன் உரிமத்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலை பாதிக்கிற வகையில் திடக்கழிவுகளை அப்புறப்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட அனைவரும் உருவாக்குகின்ற திடக்கழிவுகளையும், செப்டிக் டேங்க் கழிவுகளையும் நகராட்சி நிர்வாகம் மூலமாகவும், மறு சுழற்சி முறையிலும் முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.