தேவாலாவில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள், பொதுமக்கள் பீதி


தேவாலாவில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள், பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 25 July 2018 4:30 AM IST (Updated: 25 July 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே தேவாலாவில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தின. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் மனித– காட்டு யானை மோதலும் ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழ்கிறது. கூடலூர் அருகே தேவாலா, நாடுகாணி, வாழவயல், அட்டி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இதனிடையே நேற்று முன்தினம் வாழவயல் பகுதியில் ஒரு காட்டு யானையும், அட்டி பகுதியில் 2 காட்டு யானைகளும் அட்டகாசம் செய்தன. தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் விடிய விடிய காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காட்டு யானைகள் அங்கிருந்து சென்றன.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வாழவயல், அட்டி கிராமங்களுக்குள் 2 காட்டு யானைகள் மீண்டும் நுழைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் காட்டு யானைகள் ஊருக்குள் வந்துள்ளதால் பொதுமக்கள், குழந்தைகள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

இதனிடையே காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது தேவாலா அட்டி கிராமத்துக்குள் 2 காட்டு யானைகள் நுழைந்து சாலையில் நடந்து சென்றன. இதை வீட்டுக்குள் அமர்ந்து இருந்த பொதுமக்கள் கண்டு கூச்சலிட்டனர். அப்போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொன்ராஜ் என்பவரின் காரை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

பின்னர் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது வீட்டு சுவரை ஒரு காட்டு யானை தனது தந்தங்களால் குத்தியது. அதில் சுவரில் 2 அடி நீளத்துக்கு துளை விழுந்தது. தொடர்ந்து அந்த துளையின் வழியாக துதிக்கையை வீட்டினுள் விட்டு தின்பதற்கு ஏதாவது உணவு பொருட்கள் கிடைக்குமா? என துலாவியது. இதை கண்ட சேகர் குடும்பத்தினர் பயத்தில் அலறினர். இதனிடையே அங்கு வனத்துறையினர் வந்து பட்டாசுகளை வெடித்தனர். இதனால் யானை அங்கிருந்து சென்றது. அதன்பின்னர் சேதம் அடைந்த சுவரை வனத்துறையினர் பார்வையிட்டபோது, காட்டு யானையின் ஒரு தந்தத்தின் சிறிய பகுதி உடைந்து கிழே கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை வனத்துறையினர் கைப்பற்றினர்.

இதற்கிடையில் மற்றொரு காட்டு யானை தருமலிங்கம் என்பவரது வீட்டின் முன்புறம் சிமெண்டு ஷீட்டால் அமைக்கப்பட்டு இருந்த கூடாரத்தை சேதப்படுத்தியது. அதில் வீட்டின் தூண்கள் இடிந்து விழுந்தன. மேலும் வீடும் பலத்த சேதம் அடைந்தது. பின்னர் அந்த யானை அங்கிருந்து சென்றது. மேலும் அங்கு வந்த வனத்துறையினரும், காட்டுயானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து 2 காட்டு யானைகளும் குடியிருப்பு பகுதி வழியாக நடந்து, அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே கிராம மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதனால் மாணவ– மாணவிகள் மிகவும் தாமதமாக பள்ளிக்கூடங்களுக்கு புறப்பட்டு சென்றனர். மேலும் தோட்ட தொழிலாளர்களும் தங்களது பணிக்கு தாமதமாக சென்றனர். பட்டப்பகலில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் பரபரப்பும், பீதியும் நிலவியது. இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதால், இரவு–பகல் என எந்த நேரமும் பீதியுடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை காட்டு யானைகளால் எந்த பிரச்சினையும் உண்டானது இல்லை. குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று மாலையில் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை காணப்படுகிறது. அவர்கள் வீடு வந்து சேரும் வரை பயத்துடன் வாழ வேண்டிய நிலை உள்ளது. எனவே காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story