எச்.விஸ்வநாத்துக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் பதவி


எச்.விஸ்வநாத்துக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் பதவி
x
தினத்தந்தி 25 July 2018 4:39 AM IST (Updated: 25 July 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

எச்.விஸ்வநாத்துக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் பதவியை வழங்க தேவேகவுடா முடிவு செய்துள்ளார். இதன்மூலம் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிவாளம் போட தேவேகவுடா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தாமாக முன்வந்து ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கியது. 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 34 பேர் கொண்ட மந்திரிசபையில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. 104 தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜனதாவால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியவில்லை. இதனால் அக்கட்சியின் தலைவர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

இதற்கிடையே முதல்-மந்திரியாகவும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவராகவும் குமாரசாமி இருந்து வந்தார். முதல்-மந்திரி பதவியில் இருந்து கொண்டு அவரால் கட்சி பணிகளை கவனிக்க முடியாது என்று கருதிய தேவேகவுடா, கட்சியின் மாநில தலைவர் பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்க முடிவு செய்தார். பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த ஒருவருக்கு கட்சி தலைவர் பதவியை வழங்கி அதன் மூலம் அந்த சமூகங்களின் ஆதரவை பெற வேண்டும் என்று தேவேகவுடா விரும்புகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சித்தராமையாவை காங்கிரசுக்கு அழைத்து வந்ததில் முக்கிய பங்கு ஆற்றியவர் எச்.விஸ்வநாத் ஆவார். அவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் காங்கிரசில் இருந்தபோது சித்தராமையாவுக்கு எதிராக எச்.விஸ்வநாத் தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தார். இதனால் எச்.விஸ்வநாத் காங்கிரசில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதன்காரணமாக அதிருப்தி அடைந்து அவர் சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இருந்து விலகி தேவேகவுடாவின் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அவர் எம்.பி.யாக இருந்தார். மாநிலத்தில் அவர் மந்திரியாகவும் பணியாற்றியவர். நல்ல அரசியல் அனுபவம் வாய்ந்தவர். இந்த நிலையில் குருபா ஓட்டுகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த சமூகங்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், சித்தராமையாவின் செல்வாக்கை குறைக்கும் நோக்கத்திலும் எச்.விஸ்வநாத் எம்.எல்.ஏ.வுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் பதவியை வழங்க தேவேகவுடா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிவாளம் போட தேவேகவுடா திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

எச்.விஸ்வநாத்துக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு மந்திரிசபையில் இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு கட்சியின் மாநில தலைவர் பதவி கிடைக்கும் என்ற பேச்சு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


Next Story