கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் மர்மச்சாவு வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக தந்தை பரபரப்பு புகார்


கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் மர்மச்சாவு வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டதாக  தந்தை பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 26 July 2018 2:30 AM IST (Updated: 25 July 2018 7:55 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டிருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் வி‌ஷம் கொடுத்து கொல்லப்பட்டிருப்பதாக தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளர்

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கீழ தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மகன் குமார கிருஷ்ணன் (வயது 33). இவர் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ராமலட்சுமிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் கோவில்பட்டி புதுகிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ராமலட்சுமி குழந்தையுடன் முடிவைத்தானேந்தலில் உள்ள பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார். குமார கிருஷ்ணன் தன்னுடைய தந்தையுடன் வசித்து வந்தார். இதற்கிடையே குமார கிருஷ்ணனுக்கு சிறுநீரக கோளாறு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

மர்ம சாவு

நேற்று முன்தினம் காலையில் அவர் வீட்டில் இருந்து வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமானர். எனவே அவரை பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கோவில்பட்டியை அடுத்த சாலைப்புதூர் பெத்தேல் விடுதியின் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் அருகில் அவர் நேற்று காலையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவர் அலுவலகத்துக்கு எடுத்து செல்லும் பையும், அவரது உடலின் அருகில் இருந்தது.

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் தீவிர விசாரணை

மர்மமான முறையில் இறந்த அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி, பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அவருடைய தந்தை பரமசிவன் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், தன்னுடைய மகன் சாவில் மர்மம் உள்ளது. அவர் தனியாக எங்கும் செல்ல மாட்டார். எனவே அவருக்கு யாரேனும் வி‌ஷம் கொடுத்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே அவருக்கு யாரேனும் வி‌ஷம் கொடுத்து கொலை செய்தனரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story