இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 7 பேர் விடுதலை


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 7 பேர் விடுதலை
x
தினத்தந்தி 26 July 2018 4:30 AM IST (Updated: 26 July 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும் எல்லை தாண்டினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என நாகை மீனவர்களுக்கு இலங்கை கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் கள்ளிவயல்தோட்டம் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களின் நாட்டு படகுகளை நாகை மாவட்ட மீனவர்கள் வாடகைக்கு எடுத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். இதன்படி கள்ளிவயல்தோட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த செய்புல்லா(வயது 48) என்பவரது நாட்டு படகை வாடகைக்கு எடுத்து தரங்கம்பாடி குட்டியாண்டியூர்தெருவை சேர்ந்த நாராயணன்(45), அவரது மகன் சக்திதாசன்(19), நாகூரை சேர்ந்த ஆயுள்பதி(45), கோடியக்கரையை சேர்ந்த கண்ணதாசன்(50) ஆகிய 4 பேர் மீன்பிடிக்க தஞ்சை மாவட்ட கடற் பகுதியில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு சென்றனர்.

இதேபோல அப்துல்ரகுமான்(50) என்பவரது படகை வாடகைக்கு எடுத்து தரங்கம்பாடியை சேர்ந்த மாதேஷ்(19), பிரவின்குமார்(30), பாலகிருஷ்ணன்(45) ஆகிய 3 பேரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் அனைவரும் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு சிறிய ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் நாகை மீனவர்கள் 7 பேரையும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். பின்னர் அவர்கள் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மல்லாகம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது படகு உரிமையாளர்கள் வருகிற செப்டம்பர் மாதம் 29-ந் தேதி படகு ஆவணங்களுடன் யாழ்ப்பாணம் மல்லாகம் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். மீண்டும் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் பேரில் நாகை மீனவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. விடுதலை செய்யப்பட்ட நாகை மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கையில் இருந்து நாகை மீனவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story