குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த அணில்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்


குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த அணில்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 26 July 2018 4:30 AM IST (Updated: 26 July 2018 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே குடிநீர் தொட்டியில் அணில் இறந்து கிடந்ததால் ஆத்திரம் அடைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சேரி ஊராட்சி கீழகண்டமங்கலம் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை. அங்கு தெருவிளக்குகளும் பழுதடைந்துள்ளன. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் அணில் இறந்து கிடந்தது.

இதை பார்த்த கிராம மக்கள் குடிநீர் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்து, குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், காலிக்குடங்களுடன் நேற்று சேரி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கீழகண்டமங்கலம் கிராமத்தில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன், கோட்டூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story