சொத்து வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம், த.மா.கா, கூட்டத்தில் தீர்மானம்


சொத்து வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் போராட்டம், த.மா.கா, கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 26 July 2018 4:15 AM IST (Updated: 26 July 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி உயர்வை ரத்து செய்யாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று கோவை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

கோவை வடக்கு மாநகர் மாவட்ட த.மா.கா. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கவுண்டம்பாளையம் ராமசாமி மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் வடக்கு மாவட்ட தலைவர் கே.என்.ஜவஹர் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை தங்கம் தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாவட்டங்களின் தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் கோவை சிங்காநல்லூர் தியாகி என்.ஜி.ஆர். திடலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19–ந் தேதி ஜி.கே. மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாயிகள் மாநாடாக நடத்தப்படுகிறது. இதில் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி பேசுகிறார். அதில் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் நடுத்தர, அடித்தட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை போக்க மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். மேலும் மேட்டுப்பாளையம் சாலையில் எருக்கம்பெனி முதல் கவுண்டர் மில் வரை சாலையை அகலப்படுத்த வேண்டும்.

கோவை மாநகரில் குடிநீர் வினியோக உரிமையை வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்ததை திரும்ப பெற வேண்டும். கோவையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story