6-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: சேலம் குடோனில் 1,200 டன் ரேஷன் அரிசி தேக்கம்


6-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு: சேலம் குடோனில் 1,200 டன் ரேஷன் அரிசி தேக்கம்
x
தினத்தந்தி 25 July 2018 10:45 PM GMT (Updated: 25 July 2018 8:58 PM GMT)

6-வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பதால் சேலம் குடோனில் 1,200 டன் ரேஷன் அரிசி தேக்கம் அடைந்துள்ளது.

சேலம்,

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலைநிறுத்தம் நேற்று 6-வது நாளாக நீடித்தது.

இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் 34 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. சேலம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசி, பருப்பு, மஞ்சள், ஜவ்வரிசி, இரும்பு தளவாட பொருட்கள், ஜவுளி, புளி உள்ளிட்ட பொருட்கள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன. இதனிடையே குடோன்களில் வைக்கப்பட்டுள்ள சில பொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. லீ பஜாரில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என அழுகும் தன்மை கொண்ட பொருட்களை உலர வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த லாரிகள் வேலைநிறுத்தத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர்.

சேலம் சிவதாபுரம் அடுத்துள்ள பனங்காடு பகுதியில் இந்திய வாணிப உணவு கிடங்கு உள்ளது. இங்கிருந்து தான் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி மற்றும் கோதுமை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் 40-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் 500 டன் வரை ரேஷன் அரிசி ஏற்றி செல்லப்படும்.

இந்தநிலையில் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக கடந்த 6 நாட்களாக இந்த கிடங்கில் இருந்து தினமும் 300 டன் ரேஷன் அரிசி மட்டுமே லாரிகள் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. ஆகையால் குடோனில் 1,200 டன் வரை ரேஷன் அரிசி தேக்கமடைந்துள்ளன. லாரிகள் போராட்டம் நீடித்தால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வெளிமாநிலம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சேலம் உழவர் சந்தைகளுக்கு பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்ற காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் அந்த காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. உழவர் சந்தைகளில் நேற்று பீட்ரூட் கிலோ ரூ.38-க்கும், பீன்ஸ் ரூ.58-க்கும், கேரட் ரூ.60-க்கும், உருளைக்கிழங்கு ரூ.34-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் சுமார் ரூ.400 கோடி மதிப்பில் சரக்குகள் தேக்கமடைந்துள்ளதாகவும், லாரி உரிமையாளர்களுக்கு ரூ.70 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story