உள்ளாட்சித்துறை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம், கலெக்டரிடம் மனு


உள்ளாட்சித்துறை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம், கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 26 July 2018 3:30 AM IST (Updated: 26 July 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சித்துறை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் ஊதியம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யு.சி. இணைப்பு) சார்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகரிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சித்துறை அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் துப்புரவு தொழிலாளர்கள், மலேரியா மற்றும் டெங்கு நோய்கள் கட்டுப்பாட்டு பணியாளர்கள், குடிநீர் பம்பு ஆபரேட்டர்கள், பிட்டர்கள், எலக்ட்ரீசியன்கள், டிரைவர்கள், வரி வசூலிப்பாளர்கள், கணினி ஆபரேட்டர்கள், பிறப்பு–இறப்பு பதிவு பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் என பல்வேறு பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு சுய உதவிக்குழுவினர், ஒப்பந்த தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக தொடர்ந்து வேலை செய்து வரும் இவர்களுக்கு, பணி நிரந்தரப்படுத்தப்படவில்லை. இவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.150, அதிக பட்சம் ரூ.413 தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஊதியமும் குறித்த காலத்தில் கிடைப்பதில்லை.

அதிக வேலைப்பளுவை தாங்கி தொடர்ந்து வேலை செய்து வரும் உள்ளாட்சித்துறை தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தொகையாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். 480 நாட்கள் பணி செய்தவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும், அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் அனைத்து உள்ளாட்சித்துறை பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது குறித்து நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அரசு இதழிலும் இது வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகள், 225 ஊராட்சிகளில் பணிசெய்யும் உள்ளாட்சித்துறை தொழிலாளர்களுக்கு அரசு உத்தரவுப்படி குறைந்தபட்ச ஊதியத்தை முன்தேதியிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் எஸ்.சின்னசாமி தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. ந.பெரியசாமி, சங்க செயலாளர் ஆர்.மணியன், பொருளாளர் பி.ரவி ஆகியோர் மற்றும் உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்கத்தினர் வழங்கினார்கள்.

மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் நேற்று ஆய்வுப்பணிக்காக ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த பணியாளர்களிடம் இருந்து கலெக்டர் மனு பெற்றுக்கொண்டார்.


Next Story