ஈரோட்டில், பட்டாசு குடோனில் பதுக்கிய ரூ.6½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஈரோட்டில், பட்டாசு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.6½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு,
ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 30). இவர் அதே பகுதியில் பேன்சி கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஈரோடு வில்லரசம்பட்டி அருகே உள்ள தொட்டம்பட்டி பகுதியில் உள்ளது.
இந்த குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கலைவாணி மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செல்வன், கோவிந்தராஜ், ரவி, எழில் ஆகியோர் சம்பந்தப்பட்ட குடோனில் நேற்று மாலை திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது அந்த குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெட்டி, பெட்டியாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 610 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் என இருக்கும் என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.