பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஊழல் நடந்ததாக வழக்கு, தஞ்சை கலெக்டர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் தஞ்சை கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
தஞ்சை மாவட்டம் பூதலூர் ராயமுண்டான்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
பிரதமரின் ஆவாஸ் யோஜனா அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு வீடு ஒதுக்கும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி 2014–15–ம் நிதி ஆண்டில் தகுதி உடையவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அதன்பின் தகுதியில்லாத பலருக்கு வீடுகளை ஒதுக்கி உள்ளனர்.
இந்தநிலையில் இந்த முறைகேடு குறித்து விசாரித்தபோது, பல்வேறு நபர்களின் பெயர்களில் வீடுகளை ஒதுக்கி, உரிய தொகையை வெண்டையம்பட்டி ஊராட்சி எழுத்தர் குமாரின் மனைவி வானதியின் வங்கிக்கணக்குக்கு மாற்றி உள்ளனர்.
இதன்மூலம் பல லட்ச ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுதவிர ஊராட்சி எழுத்தர் குமாரின் தாயார் வங்கிக்கணக்குக்கு இலவச கழிப்பறைக்கான தொகை மோசடியாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி குற்றச்சாட்டின்பேரில் குமாரை இடமாற்றம் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் இந்த மோசடியில் தொடர்புடைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தோம். இதுவரை பதில் இல்லை. எனவே பிரதமரின் வீடு திட்டத்தில் நடந்துள்ள மோசடி குறித்து விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி நிஷாபானு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதிசுப்பிரமணியன் ஆஜராகி, ‘‘பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் வெண்டையம்பட்டி ஊராட்சியில் ரூ.3 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து விரிவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தஞ்சை கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.