தொழில் அதிபரை கடத்தி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் துப்பாக்கியுடன் காரில் வந்த முக்கிய குற்றவாளிகள் 3 பேர் சிக்கினர்
தொழில் அதிபரை கடத்தி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் 3 பேர் காரில் துப்பாக்கியுடன் சென்ற போது, அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மதுராந்தகம்,
மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 60). தொழில் அதிபரான இவரை கடந்த 30–ந்தேதி இரவு மர்மநபர்கள் சிலர் காரில் கடத்தி சென்றுவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மேல்மருவத்தூர் அருகே காட்டுப்பகுதியில் கடந்த 1–ந் தேதி கடத்தல்காரர்கள் முத்துகுமாரை இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டனர்.
ரூ.10 லட்சம் கொடுத்து தொழில் அதிபர் முத்துகுமாரை கடத்தல்காரர்களிடமிருந்து அவரது உறவினர்கள் மீட்டதாக கூறப்படுகிறது.
கடத்தல் கும்பலை பிடிக்க காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி தேன்மொழி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ்ஹதிமானி மதுராந்தகம் டி.எஸ்.பி ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அந்தோணிஸ்டாலின், வடிவேல்முருகன் உள்ளிட்ட போலீசார் கடத்தல்காரர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்த வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து 3 பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மற்றும் 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (30) அவரது தம்பி சுரேஷ் (24), அவரது நண்பரான திருப்பூர் உடுமலைபேட்டையை சேர்ந்த முரளி (24) ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
தனிப்படை போலீசார் படாளத்தை அடுத்த சாலவாக்கம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் இருந்தவர்கள் தொழில் அதிபரை கடத்தி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகளான ஞானசேகரன் (30), சுரேஷ் (24), முரளி (24) என்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, சொகுசு கார், 2 மோட்டார்சைக்கிள்கள், 4 பட்டாகத்தி, ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஞானசேகரனின் குடும்பமே கைதாகி உள்ளது. அவரது 2 மனைவிகள், தாயார் மற்றும் தம்பி சுரேஷ் உள்பட 10 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.