மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு: கரைகளை தொட்டபடி செல்லும் காவிரி, கொள்ளிடம் ஆறுகள்


மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறப்பு: கரைகளை தொட்டபடி செல்லும் காவிரி, கொள்ளிடம் ஆறுகள்
x
தினத்தந்தி 26 July 2018 11:00 PM GMT (Updated: 26 July 2018 7:09 PM GMT)

மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து திறந்து விடப்படும் தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் கரைகளை தொட்டபடி செல்கிறது. இதனால் குடிசைகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

திருச்சி,

தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரி ஆறு இலக்கியங்களில் ‘வான் பொய்ப்பினும், தான் பொய்யா காவிரி’ என புலவர்களால் போற்றப்பட்டு உள்ளது. வானில் இருந்து பெய்யக்கூடிய மழை இல்லை என்றாலும், அதனை நம்பி இருக்கும் விவசாயிகளை காவிரித்தாய் ஏமாற்றாமல் வாழவைப்பாள் என்பதே இதன் பொருள். இந்த பொருளுக்கு ஏற்ப தான் தமிழகத்தில் மழை இல்லை என்றாலும், கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையினால் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டு, அதன் மூலம் மேட்டூர் அணை நிரம்பி உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து இரு நாட்களுக்கு முன் வினாடிக்கு 80 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக திறந்து விடப்பட்ட தண்ணீரால் காவிரி ஆறு கடல் காணா திருச்சி நகருக்கு ஒரு செயற்கை கடல் போல் கடந்த சில நாட்களாக காட்சி தந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை வழியாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை அடைந்தது. மேட்டூரில் இருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் அகண்ட காவிரி முக்கொம்பில் தான் காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரிகிறது.

முக்கொம்பு மேலணையில் இருந்து நேற்று முன்தினம் கொள்ளிடத்தில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஐந்தாண்டுகளுக்கு பிறகு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் கொள்ளிடம் கரையோரத்தில் உள்ள வீடுகள் தண்ணீரால் சூழப்பட்டன. சலவை தொழிலாளர்களின் குடிசைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. தண்ணீர் புகுந்த வீடுகளில் வசித்தவர்களும், குடிசைகளை இழந்தவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

கர்நாடகாவில் இருந்து வரும் உபரி நீர் தமிழகத்திற்கு அப்படியே திறந்து விடப்படுவதால், திருச்சியில் காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளின் கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. திருச்சி சிந்தாமணி பகுதியில் காவிரி ஆற்றின் கரைகளில் உள்ள வீடுகளை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையிலும் அனைத்து படிக்கட்டுகளையும் தொட்டபடி தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் உள்ளே இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.நேற்று மாலை நிலவரப்படி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் 32 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைய, குறைய முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கும் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு விடும்.

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் காட்சிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் ஆர்வமாக பார்த்து விட்டு செல்கிறார்கள். விவசாயிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகளை ஆற்றுக்கு கொண்டு வந்து ஆழம் குறைந்த பகுதிகளில் குளிப்பாட்டி செல்கிறார்கள். சிறுவன் முதல் வயதான பாட்டி வரை பலரும் அலையடித்து வரும் தண்ணீரின் அழகை ரசித்தனர். பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். காலண்டரில் குறிப்பிட்ட படி ஆடிப்பெருக்கு விழா வருகிற 3-ந்தேதி தான் என்றாலும், சீறிப்பாய்ந்து வரும் காவிரியின் அழகை ரசிக்க வரும் பொதுமக்கள் இப்போதே அறிவிக்கப்படாத ஆடிப்பெருக்கை கொண்டாடுவது போல், காவிரி தாயை வரவேற்று ஆர்வமிகுதியால் ஆரத்தி எடுத்த நிகழ்ச்சிகளும் அம்மா மண்டபம் படித்துறையில் நேற்று அரங்கேறின.

காவிரி ஆற்றில் வரும் வெள்ளத்தை பார்க்க காவிரி பாலத்தில் இரவிலும், பொது மக்கள் திரண்டு வருகிறார் கள். அதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. 

Next Story