மேற்பனைக்காடு வந்த காவிரி நீருக்கு நெல்விதைகள்- மலர்களை தூவி வரவேற்பு


மேற்பனைக்காடு வந்த காவிரி நீருக்கு நெல்விதைகள்- மலர்களை தூவி வரவேற்பு
x
தினத்தந்தி 27 July 2018 4:00 AM IST (Updated: 27 July 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு வந்த காவிரி நீரில் நெல்விதைகள் மற்றும் மலர்களை தூவி கிராம மக்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கீரமங்கலம்,

கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால், அங்குள்ள அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று அதிகாலை கடைமடை பாசன பகுதியான புதுக்கோட்டை மாவட்டத்தை வந்தடைந்தது. அதிகாலையில் நெடுவாசல் பகுதிக்கு வந்த தண்ணீரை வருவாய் துறையினர் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு கிராமத்தின் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் கரைபுரண்டு வந்த தண்ணீரை வரவேற்க ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன், அறந்தாங்கி கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், கிராம மக்கள் காத்திருந்தனர். அவர்கள் தண்ணீர் மேற்பனைக்காடு வந்தபோது நெல்விதை மற்றும் மலர்கள் தூவி வரவேற்பு கொடுத்தனர். இதேபோல் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறை இன்றி வந்தால் இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

Next Story