புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள்-மாணவர்கள் சாலை மறியல்


புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள்-மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 July 2018 4:30 AM IST (Updated: 27 July 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள்-மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் கைது செய்ய முயன்றபோது மாணவர்கள் சிலர் கால்வாயில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பணிகொண்டான்விடுதி, வெட்டுவாக்கோட்டை ஆகிய 2 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கீழஊரணிபுரம் மற்றும் மேலஊரணிபுரம் எல்லையில் மதுக்கடைகள் திறப்பதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மதுக்கடை திறக்க தடை கேட்டு கிராம மக்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி ஊரணிபுரம் கல்லணைக்கால்வாய் அலிவலம் பிரிவு வாய்க்கால் பகுதியில் 2 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஒரே நேரத்தில் இந்த 2 மதுக்கடைகளும் திறக்கப்பட்டதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விவசாய நிலங்கள் உள்ள பகுதியில் மதுக்கடைகள் இருப்பதால் மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களால் விவசாய பணிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதுக்கடைகள் இருப்பதாகவும் கூறி கிராம மக்கள் கடந்த 9-ந் தேதி ஊரணிபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், மதுக்கடைகள் ஒருவாரத்துக்குள் மூடப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். ஆனால் 2 மதுக்கடைகளும் மூடப் படாததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்த போராட்டம் நேற்று நடை பெறும் என அறிவிக்கப் பட்டது.

இதனால் ஊரணிபுரத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நாகராஜ், செங்கமலக்கண்ணன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மதுக்கடைக்கு செல்லும் வழியில் தடுப்புக் கம்பிகள் போடப்பட்டிருந்தன. அதில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க மதுபானக்கடை மூடப்பட்டது என்று எழுதப்பட்ட பேனரும் தொங்க விடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் காலை 9 மணி அளவில் கிராம மக்கள் ஊரணிபுரம் கல்லணை கால்வாய் பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பணிகொண்டான்விடுதி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தி.மு.க. ஊராட்சி செயலாளருமான சோம.கண்ணப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளருமான சி.ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினருமான டி.எஸ்..ராஜேந்திரன், பா.ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் துரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச்செயலாளர் காசிநாதன், திருவோணம் வட்டார விவசாயிகள் நலச்சங்க செயலாளர் சின்னத்துரை, அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சிவமுருகேசன், மேலஊரணிபுரம் ஆர்.கோவிந்தராஜ், சிவவிடுதி முருகன் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இவர்கள் மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மதுக்கடைகள் அமைக்க அனுமதி வழங்கிய அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மதுக்கடையை மூடிவிட்டதாகவும், மற்றொரு கடையை 1 வார காலத்துக்குள் மூடி விடுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும்படி கிராம மக்கள் அதிகாரிகளிடம் கூறினர்.

இதைத்தொடர்ந்து “ஆர்டர்” தயார் செய்து கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்ற அதிகாரிகள் சற்று நேரத்தில் திரும்பி வந்து கிராம மக்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரி வெளியூரில் இருப்பதால் இன்றைக்கு எங்களால் எழுத்துப்பூர்வமான “ஆர்டர்” தரமுடியாது என்று கூறினர். இதனால் அதிகாரிகளுக்கும், பொதுமக்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மதுவிலக்கு அமல்பிரிவு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், சாலை மறியலில் ஈடுபட்டிருப்பவர்களை கைது செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர்.

சாலையில் அமர்ந்திருந்த மாணவ-மாணவிகளையும் போலீசார் வலுகட்டாயமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிப்பதற்காக அருகே உள்ள கல்லணை கால்வாயில் குதித்தனர். இதில் சில மாணவர்கள் ஆற்றில் மூழ்கினர். அவர்களை அங்கு இருந்த வாலிபர்கள் சிலர் கைகொடுத்து காப்பாற்றினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட 50 பெண்கள் உள்பட 160 பேரை வேனில் ஏற்றி திருவோணத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் செங்கிப்பட்டி-பட்டுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

இதனிடையே கிராம மக்கள் மூட வலியுறுத்திய 2 மதுக்கடைகளும் பகல் 12 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. கிராம மக்களின் போராட்டம் காரணமாக மதுக்கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story