தஞ்சையை அடுத்த விளார் கிராம நிர்வாக அதிகாரியை மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு


தஞ்சையை அடுத்த விளார் கிராம நிர்வாக அதிகாரியை மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 27 July 2018 4:00 AM IST (Updated: 27 July 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையை அடுத்த விளார் கிராம நிர்வாக அதிகாரியை மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆர்.டி.ஓ. முன்னிலையில் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த விளார் ஊராட்சில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர் அந்த ஊராட்சியில் 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி அவர் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதை அறிந்ததும் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 75-க்கும் மேற்பட்டவர்கள் சமூக ஆர்வலர்கள் செல்வராஜ், கலியமூர்த்தி, புண்ணியமூர்த்தி, பானுமதி, கோபுராஜ், பாபுராஜ் ஆகியோர் தலைமையில் தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது ஆர்.டி.ஓ. சுரேஷ் அலுவலகத்தை விட்டு வெளியே ஜீப்பில் வந்தார். அவர் பொதுமக்களை பார்த்ததும் இறங்கி வந்து கோரிக்கையை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள், கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார், மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறார். மக்களை அலைய வைப்பது இல்லை. மேலும் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பொதுமக்களுக்கு தேவையான சான்றுகளை எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே அவரை இடமாற்றம் செய்யக்கூடாது. எங்கள் கிராமத்திலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்ததோடு மனுவும் அளித்தனர்.

அதற்கு ஆர்.டி.ஓ. சுரேஷ், “அரசு விதிமுறைப்படி 3 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது விதி. எனவே மற்ற கிராம நிர்வாக அதிகாரிகள் யாரும் இந்த பகுதிக்கு வர விருப்பம் தெரிவிக்காவிட்டால் உங்களது கருத்துக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என தெரிவித்தார்.

ஆனால் பொதுமக்கள் கிராம நிர்வாக அதிகாரியை மாற்றக்கூடாது என கூறியதோடு, ஆர்.டி.ஓ. முன்னிலையில் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து ஆர்.டி.ஓ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story