மராத்தா சமுதாயத்தினருக்கு ஆதரவாக மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா


மராத்தா சமுதாயத்தினருக்கு ஆதரவாக மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
x
தினத்தந்தி 27 July 2018 12:00 AM GMT (Updated: 27 July 2018 12:00 AM GMT)

மராத்தா சமுதாயத்தினருக்கு ஆதரவாக மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் மராத்தா சமுதாயத்தினர் கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதில் கடந்த சில நாட்களாக அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டம் மும்பை உள்பட பல இடங்களில் வன்முறையாக மாறியது.

மேலும் மராத்தா இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அவுரங்காபாத்தில் காகாசாகிப் ஷிண்டே என்ற வாலிபர் ஆற்றில் குதித்தும், ஜெகநாத் சோனவானே என்பவர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர்.

இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான பிரச்சினையில் மராத்தா சமுதாயத்தினருக்கு ஆதரவாக கன்னட் தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. ஹர்ஷ்வர்தன் ஜாதவ் தனது எம்.எல்.ஏ. பதவியை நேற்றுமுன்தினம் ராஜினாமா செய்தார்.

இதுபோல் வைஜாப்பூர் தொகுதி தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பாவுசாகிப் சிகத்காவ்கரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் பண்டர்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பரத் பால்கே மற்றும் நாசிக் மாவட்டம் சந்த்வாட் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ராகுல் அகெர் ஆகியோரும் மராத்தா சமுதாயத்தினர் போராட்டத்துக்கு ஆதரவாக தங்களது பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மராட்டிய சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 288. இதில் 114 பேர் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். சிவசேனாவில் உள்ள 63 எம்.எல்.ஏ.க்களில் 50 பேர் மராத்தா சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story