கூடலூர் பகுதியில் தொடரும் அட்டகாசம்: 2 ஏக்கர் நெல் நாற்றுகளை மிதித்து நாசப்படுத்திய காட்டு யானை
கூடலூர் பகுதியில் 2 ஏக்கர் பரப்பளவிலான நெல் நாற்றுகளை காட்டு யானை மிதித்து நாசப்படுத்தியது. இதனால் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீடு தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்,
கூடலூர் தாலுகா பகுதியில் உள்ள ஓவேலி, தேவாலா, ஸ்ரீமதுரை பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வீடுகளை உடைத்தும், விவசாய பயிர்களை தின்றும் சேதப்படுத்தி வருகின்றன. கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சி காந்திநகரில் 5 காட்டு யானைகள் நேற்று முன்தினம் புகுந்தது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாமி, சகுந்தலா, சுந்தரராஜ் ஆகியோரது வீடுகளை முற்றுகையிட்டு உடைத்தன. இதில் வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.
இதேபோல் ஸ்ரீமதுரை ஊராட்சி கோழிக்கண்டி பகுதியில் ஒரு காட்டு யானை நள்ளிரவு ஊருக்குள் புகுந்தது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோபாலன், மனோஜ்குமார் ஆகியோரது வயலுக்குள் காட்டு யானை சென்றது. பின்னர் அங்கு நடவு செய்து இருந்த நெல் நாற்றுகளை மிதித்து நாசப்படுத்தியது. தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோபாலன், மனோஜ்குமார் ஆகியோர் தங்கள் நிலத்தில் பயிரிட்டு இருந்த நெல் நாற்றுகளை காட்டு யானை மிதித்துள்ளதை கண்டு கண் கலங்கினர். இந்த நிலையில் ஸ்ரீமதுரை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த அம்மா திட்ட முகாமில் கோபாலன், மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தனர். அதில் தங்களது விவசாய நிலத்தில் நுழைந்து சுமார் 2 ஏக்கர் நெல் நாற்றுகளை காட்டு யானை மிதித்து விட்டது. இதனால் ரூ.17 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மனுக்களை பெற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதி அளித்தனர்.
காட்டுயானைகளின் தொடர் அட்டகாசத்தால் கூடலூர் பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் அதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி கண்ணன்வயல் பகுதியை சேர்ந்த போலீஸ் ஏட்டு தினேஷ்குமாரின் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை காட்டுயானை மிதித்து சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.