ராகுல்காந்தியுடன் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு


ராகுல்காந்தியுடன் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 28 July 2018 5:53 AM IST (Updated: 28 July 2018 5:53 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தியுடன் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று சந்தித்து பேசினார்கள். அப்போது அவரிடம் மந்திரி பதவி வழங்கும்படி 3 பேரும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரிசபையில் காங்கிரசுக்கு 20 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு 12 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் காங்கிரஸ் சார்பில் 6 மந்திரி பதவிகளும், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் ஒரு மந்திரி பதவியும் காலியாக உள்ளது. மந்திரி பதவி கேட்டு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும், வடகர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

மேலும் ஆடி(ஆஷாட) மாதம் முடிந்ததும் மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மந்திரிசபையில் யார், யாருக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது குறித்து அடுத்த வாரம் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் நடைபெற உள்ள ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனர். மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய காங்கிரஸ் முடிவு செய்திருப்பதால், இப்போதில் இருந்தே மந்திரி பதவிக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மந்திரி பதவி கிடைக்காமல் அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் வகையில் அவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக முதற்கட்டமாக 30 வாரியங்களுக்கான தலைவர்களை நியமிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், பெங்களூருவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைரதி பசவராஜ், எஸ்.டி.சோமசேகர், முனிரத்னா ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை திடீரென்று சந்தித்து பேசினார்கள்.

அப்போது அவர்கள் 3 பேரும் மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முடிவு செய்திருப்பதால், தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று ராகுல்காந்தியிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும் தங்களுக்கு மந்திரி பதவி அல்லது வாரிய தலைவர் பதவி வழங்கும்படி கோரி ராகுல்காந்தியிடம் 3 எம்.எல்.ஏ.க்களும் மனு கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல, மற்ற எம்.எல்.ஏ.க்களும், சித்தராமையா, பரமேஸ்வர் உள்ளிட்ட தலைவர்களிடம் மந்திரி பதவி வழங்கும்படி வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

Next Story