நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலை நிறுத்தம்
நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த ஆணையம் மாநில உரிமைகளுக்கு எதிரானது. ஏழை மாணவர்களை பாதிக்கும். எனவே தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த தனியார் டாக்டர்களும் கலந்து கொண்டனர். பிரசவம், உள்நோயாளிகள் சிகிச்சையை தவிர புறநோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் பல தனியார் ஆஸ்பத்திரிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தனியார் டாக்டர்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வள்ளியூர்– தென்காசிவள்ளியூரில் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் நேற்று காலை முதல் மாலை வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வள்ளியூரில் இந்திய மருத்துவ சங்கம் கிளை சார்பில், ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் கிறிஸ்டோபர் சாமுவேல் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை எடுக்கும் முடிவுபடி தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம், ராதாபுரம், கள்ளிகுளம், திசையன்விளை, பரப்பாடி, நாங்குநேரி, ஏர்வாடி, டோனாவூர், களக்காடு பகுதிகளை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். பொருளாளர் நஷீர் நன்றி கூறினார்.
இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் கிளை சார்பில், தென்காசியிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. வேலைநிறுத்த போராட்டத்தில் அனைத்து டாக்டர்களும் பங்கேற்றனர்.