படியில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை


படியில் ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள் கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 July 2018 10:15 PM (Updated: 28 July 2018 10:01 PM)
t-max-icont-min-icon

போதிய பஸ் வசதி இல்லாததால் படியில் நின்றபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே, கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள எப்ரி கிராமத்தில் இருந்து வழக்கமாக காலை 8 மணிக்கு அரசு பஸ் கிருஷ்ணகிரி நோக்கி செல்கிறது. இந்த பஸ்சில் தான் வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். அதில் சென்றால் தான் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியும் என்பதால் மாணவ, மாணவிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

அதை தவற விட்டால் அடுத்த பஸ் 9.30-க்கு தான் உள்ளது எனக்கூறப்படுகிறது. இதனால் காலை 8 மணிக்கு செல்லும் பஸ்சில் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும் அதிக அளவில் ஏறுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கின்றனர்.

கூட்டம் அதிகமாக இருப்பதால் இடைப்பட்ட பஸ் நிறுத்தங்களில் அந்த பஸ் நிற்பதில்லை. இதனால் இடைப்பட்ட நிறுத்தங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் 3 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து பள்ளிக்கு செல்கின்றனர். இப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன்கருதி இப்பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story