மாவட்டம் முழுவதும் தனியார் டாக்டர்கள் 800 பேர் வேலைநிறுத்தம்


மாவட்டம் முழுவதும் தனியார் டாக்டர்கள் 800 பேர் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 29 July 2018 4:45 AM IST (Updated: 29 July 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று தனியார் டாக்டர்கள் 800 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

தேசிய மருத்துவ ஆணையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இந்திய மருத்துவ சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். எனினும், மத்திய அரசு டாக்டர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. இது டாக்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது.

இதைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை எதிர்த்து தமிழ்நாட்டில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவித்தது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் தனியார் டாக்டர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பல பகுதிகளில் மருத்துவமனைகள் அடைக்கப்பட்டு இருந்தன. எனினும், நோயாளிகளின் நலன்கருதி அவசரகால சிகிச்சைகளை டாக்டர்கள் அளித்தனர். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படவில்லை. இதனால் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மக்கள் சிகிச்சைக்காக சென்றனர். இதன் காரணமாக பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் நோயாளிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே இந்திய மருத்துவ சங்கத்தின் திண்டுக்கல் கிளை நிர்வாகிகள் கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. இதற்கு தலைவர் ரவி, செயலாளர் வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுபற்றி செயலாளர் வீரமணி கூறுகையில், தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை எதிர்த்து போராட்டம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 400 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 800 டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர், என்றார்.

இதேபோல், வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த டாக்டர்கள் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவை அடைத்து போராட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் வத்தலக்குண்டு தலைவர் நந்தகோபால்சாமி தலைமை தாங்கினார். இணை செயலாளர் முருகேசபாண்டியன், துணைத்தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் சங்க கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் சங்க செயலாளர் ஹரி நன்றி கூறினார்.


Next Story