163 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜினால் இயக்கப்படும் ரெயில் புதுவையில் வெள்ளோட்டம்
163 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜினால் இயக்கப்படும் ரெயில் நேற்று புதுவையில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
புதுச்சேரி,
இந்திய ரெயில்வே துறைக்கு கடந்த 1855–ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட நீராவி ரெயில் என்ஜின் 1990–ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் அந்த ரெயில் ஹவுராவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த ரெயில் என்ஜின் கடந்த 2010–ம் ஆண்டு இந்தியன் ரெயில்வேயின் சென்னை பெரம்பூர் தொழிற்சாலையில் சீரமைக்கப்பட்டது. பின்னர் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
சுற்றுலா பயணிகளை கவரும் விதத்திலும், பழமையை தற்போது உள்ள சிறுவர்கள், மாணவர்கள், இளம் வயதினர் கண்டு மகிழவும், அதில் பயணம் செய்யும் வகையிலும் 163 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜினால் ஓடும் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அந்த நீராவி ரெயில் என்ஜின் மற்றும் 1 பெட்டி கடந்த 23–ந் தேதி பயணிகள் ரெயில் மூலம் புதுவை கொண்டு வரப்பட்டது.
புதுவை ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு சில பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் பார்த்து ரசித்தனர். பலர் அந்த ரெயிலின் அருகில் நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். 40 இருக்கைகள் கொண்ட இந்த ரெயில் புதுவையில் இருந்து சின்னபாபு சமுத்திரம் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை புதுச்சேரி ரெயில் நிலைய மேலாளர் குணசீலன் மேற்பார்வையில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
வெள்ளோட்டத்தின் போது இந்த ரெயில் புதுவையில் இருந்து புறப்பட்டு சின்னபாபு சமுத்திரம் சென்று சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து புதுவைக்கு திரும்பியது. ரெயில் சுமார் 30 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. ரெயில் சென்ற இடத்தில் உள்ள பொதுமக்கள் இதனை பார்த்து ரசித்தனர். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கான கட்டணம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும் எப்போது இருந்து இயக்குவது என்பதும் முடிவு செய்யப்படவில்லை.