தமிழ் சங்கமம் மாநாட்டுக்கு முதல்–அமைச்சர் ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளார் அமைச்சர் தகவல்


தமிழ் சங்கமம் மாநாட்டுக்கு முதல்–அமைச்சர் ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளார் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 30 July 2018 4:30 AM IST (Updated: 29 July 2018 10:47 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் சங்கமம் மாநாட்டுக்கு முதல்– அமைச்சர் ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளார் என்று, அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை இணைந்து தமிழ் சங்கமம் என்ற 3 நாள் மாநாட்டை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடத்தியது. இதன் நிறைவு நாள் மாநாடு நேற்று நடைபெற்றது.

மாநாட்டுக்கு அனைத்திந்திய தமிழ்ச்சங்க பேரவை தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். பதிவாளர் முத்துக்குமார் வரவேற்றார். துணைவேந்தர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார்.


விழாவில் தமிழ் ஆட்சிமொழி, தமிழ்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

உலக அளவில் புலம் பெயர்ந்தவர்கள் பட்டியலில் தமிழர்கள் 2–வது இடத்தில் உள்ளனர். தமிழர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் திறனுடன் இருப்பார்கள். செல்வாக்கு மிக்க பட்டியலில் தமிழ்மொழி 14–வது இடத்தில் உள்ளது. வரும் 3 வருடத்தில் யுனஸ்கோ தயாரிக்கப்படும் மொழி பட்டியலில் தமிழ்மொழி 10–வது இடத்துக்குள் வர வேண்டும். அதற்கு தமிழ்ப்பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கும்.

ரூ.36 கோடியில் உலக தமிழ் சங்கத்தின் கட்டிடத்தை கட்டி வருகிறோம். ரூ.50 கோடி மதிப்பில் பழந்தமிழர் கண்காட்சி உருவாக்கப்பட்டு வருகிறது. உலக தமிழ் சங்கத்தை, உலகத்தில் உள்ள நன்றாக இயங்கக்கூடிய தமிழர் அமைப்புகளை கொண்டு இயக்க வேண்டும். அதில் வடிவம் கொடுப்பதில் சிக்கல் உள்ளது.


தமிழ்வளர்மையங்களின் மூலம் தமிழை வரையறைப்படுத்தி, நெறிப்படுத்தப்பட்டு, இணையதளம் மூலம் வழங்கப்பட உள்ளோம். இதில் 1 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். தமிழ் சங்கமம் மாநாட்டுக்கு முதல்–அமைச்சர் ரூ.5 கோடி ஒதுக்கி உள்ளார். மாநாட்டை 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். உலகத்தமிழ்மாநாடு அடுத்த ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ளது. ஆண்டுக்கு 5 ஆயிரம் பேரை உலக அளவில் தமிழ்சங்கமத்துக்கு வரும் வகையில் அமைக்க வேண்டும்.

இந்தி மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழகத்தில் 2001–ம் ஆண்டு 30 ஆயிரம் பேர் இருந்தனர். இன்று 4 மடங்காக உயர்ந்து விட்டனர். தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் தமிழை விட்டுவிட்டார்களா? அல்லது தமிழை பேசுவதை பெருமையுடன் பார்ப்பதில்லையா? எனவே அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு உலக தமிழ் சங்கத்துக்கு தமிழ்ப்பல்கலைக்கழகம் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அகில இந்திய தமிழ்ச்சங்க பேரவை செயலாளர் முகுந்தன், நாட்டுப்புறவியல் துறை தலைவர் காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் சங்கமம் ஒருங்கிணைப்பாளர் குறிஞ்சிவேந்தன் நன்றி கூறினார்.

Next Story