அணைக்கரை கீழணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் அவலம்


அணைக்கரை கீழணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் அவலம்
x
தினத்தந்தி 30 July 2018 4:15 AM IST (Updated: 30 July 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

அணைக்கரை கீழணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதால் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்துள்ள அணைக்கரை கீழணையில், மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொள்ளிடம் வழியாக வீணாக கடலில் கலந்து விடுகிறது. எனவே மேட்டூர் அணையில் இருந்து, அணைக்கரை கீழணை வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் தடுப்பணை அமைத்து, அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மேலும் கொள்ளிடம் கீழணையில் இருந்து வீணாகும் உபரி தண்ணீரை, வாய்க்கால் அமைத்தால் அதன் மூலம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சோழ மன்னனால் வெட்டப்பட்ட பொன்னேரியில் சேமித்தால், அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயனடையும்.

மேலும் அந்த வழியாக செல்லும் கருவாட்டு ஓடை மூலம் பாண்டியர்களால் வெட்டப்பட்ட பாண்டியன் ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பயன்படும். இதன் மூலம் சுமார் 3,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் பருவமழை காலங்களில் தேக்கி வைக்கும் தண்ணீரை கொண்டு ஒரு போகம் சாகுபடி நடைபெறுகிறது. வீணாகும் தண்ணீரை கொண்டு வந்தால் பல கிராமங்களில் விவசாயம் நடைபெறும்.

மேலும் பொன்னேரி மற்றும் பாண்டியன் ஏரிகளை ஆழப்படுத்தி, பொன்னேரியில் இருந்து செல்லும் கருவாட்டு ஓடையை தூர்வார வேண்டும். பாண்டியன் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் ஓடையை சரி செய்து, வடவாற்றில் உள்ள மதகுகளையும் சரி செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் இரண்டு போக சாகுபடி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். எனவே தடுப்பணை கட்டி கடலில் சென்றடையும் தண்ணீரை தடுத்து நிறுத்தி வாய்க்கால் மூலம் பொன்னேரி மற்றும் பாண்டியன் ஏரியில் தண்ணீரை சேமித்து வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story