மாற்று சான்றிதழை கொடுக்க மறுத்ததால் விபரீதம்: கல்லூரியின் 3–வது மாடியில் இருந்து குதித்த நர்சிங் மாணவி
மாற்று சான்றிதழை கொடுக்க மறுத்ததால் கல்லூரி கட்டிடத்தின் 3–வது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலைக்கு முயன்றார். 2 கால்களும் முறிந்த நிலையில் அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருமங்கலம்,
மதுரையை அடுத்துள்ள முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவரின் 18 வயது மகள், ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் படிப்பு தொடர்பாக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு பயிற்சியும் தரப்பட்டது.
அந்த மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒருவர், மாணவியை திருமணம் செய்வதாக கூறி காதல் கடிதம் கொடுத்தாராம். இதை பார்த்த நர்சிங் கல்லூரி ஆசிரியை, அந்த மாணவியை கூப்பிட்டு கண்டித்துள்ளார். மேலும் அதுபற்றி கல்லூரியின் முதல்வருக்கும் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினரும் மாணவியை கண்டித்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவி, அந்த கல்லூரியில் தொடர்ந்து படிக்க விரும்பவில்லை என்று கூறி, தன்னுடைய மாற்று சான்றிதழை (டி.சி.) கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி நிர்வாகம் ரூ.7 லட்சம் வழங்கினால், செய்முறை பயிற்சிக்கான மதிப்பெண் போடப்பட்டு, மாணவி தேர்ச்சி பெற்றதாக மாற்று சான்றிதழ் வழங்கப்படும் என்றும், பணம் கொடுக்கவில்லை என்றால் மாற்றுச்சான்றிதழை கொடுக்க முடியாது என கூறியதாகவும், அதனால் மாணவி மனவருத்தம் அடைந்ததாகவும் தெரியவருகிறது.
இதனால் விபரீத முடிவெடுத்த அந்த மாணவி, தான் படித்த கல்லூரி கட்டிடத்தின் 3–வது மாடிக்கு சென்று குதித்து தற்கொலைக்கு முயன்றார். தரையில் வந்து விழுந்த அந்த மாணவி உயிருக்கு போராடியதை பார்த்து, அந்த கல்லூரியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே மாணவியை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 3–வது மாடியில் இருந்து குதித்ததில் மாணவியின் 2 கால்களும் முறிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மாற்றுச்சான்றிதழை கல்லூரி நிர்வாகம் தரவில்லை என்று கூறியதால் மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.