தலைஞாயிறு அருகே அடப்பாற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் தண்ணீர் வராததை கண்டித்து நடந்தது


தலைஞாயிறு அருகே அடப்பாற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் தண்ணீர் வராததை கண்டித்து நடந்தது
x
தினத்தந்தி 30 July 2018 4:15 AM IST (Updated: 30 July 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு அருகே ஆற்றில் தண்ணீர் வராததை கண்டித்து அடப்பாற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்மேடு,

காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காலம் தாழ்த்தியே தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பொய்த்து போனது. காலம் தாழ்த்தி திறந்துவிடப்படும் காவிரி தண்ணீரை பயன்படுத்தி சம்பா சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

அதேபோல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடாததால் பொய்த்து போனது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19-ந்தேதி நிரம்பியது. இதை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக கடந்த 22-ந்தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் வந்தடைந்தது. இந்த நிலையில் நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் துளசாபுரம் சட்ரஸ் அருகில் அடப்பாற்றுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இந்த அடப்பாற்றின் மூலம் அந்த பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அடப்பாற்றில் தண்ணீர் வராததை கண்டித்து விவசாயிகள் நேற்று ஆற்றில் இறங்கி நின்றும், படுத்துக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகையன் தலைமை தாங்கினார். அப்போது தலைஞாயிறு பகுதியில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் அடப்பாற்றின் மூலம்தான் பாசன வசதி பெறுகின்றன.

மேட்டூர் அணை நிரம்பியதால் இந்த ஆண்டு தேவையான தண்ணீர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உழவு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 10 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை அடப்பாற்றில் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஆடு, மாடுகளுக்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. எனவே அடப்பாற்றிற்கு தண்ணீர் வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட விவசாயப்பிரிவு துணை தலைவர் சரவணன், தி.மு.க. கிளை செயலாளர் வைரக்கண்ணு, ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகையன் உள்பட பலர்கலந்து கொண்டனர். 

Next Story