மக்களை திரட்டி மனிதசங்கிலி போராட்டம் முத்தரசன் பேட்டி
8 வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து வருகிற 6-ந்தேதி 5 மாவட்ட மக்களை திரட்டி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும், என்றுசேலத்தில் முத்தரசன் தெரிவித்தார்.
சேலம்,
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை தொடர்பாக சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளுடன் மாநில செயலாளர் முத்தரசன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறார். இதை பற்றி தவறான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.
சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை அமைப்பதற்கு அரசு உரிய விளக்கமளித்தால் நாங்களும் ஒத்துழைப்பு தருகிறோம். இந்த சாலையால் பள்ளிகள், மரங்கள், கோவில்கள் உள்ளிட்டவை அழிக்கப்படுகிறது. சேலம் கலெக்டரிடம் மனு கொடுத்தும் பயனில்லாத காரணத்தால், ஊரை காக்கும் கருப்பண்ணசாமி, அம்மன் கோவில்களில் பொதுமக்கள் மனு கொடுத்து வருகின்றனர்.
பசுமை சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்படும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட 5 மாவட்டங்களில் உள்ள அனைத்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர்களை ஒன்று திரட்டி வருகிற (ஆகஸ்டு) 6-ந் தேதி மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்படும். தென்மேற்கு பருவமழை பெய்யும் என்று அரசால் கணிக்க முடியும், ஆனால் அதை அறிந்து முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இதனால் தினமும் உபரிநீர் 5 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நீரை மக்களுக்கு பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் தமிழகத்தில் பொறுப்பற்ற அரசாங்கமாக உள்ளது. எந்த திட்டமானாலும் அரசு கொண்டு வரலாம். மக்களுக்கு பாதிப்பு என்றால் அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதே நல்ல அரசு ஆகும்.
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பணிய வைக்க மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் வருமான வரி சோதனையை நடத்துகிறது. ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரை தனிநபருக்கு கொடுத்ததற்கு மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story