பரோலில் சென்று தலைமறைவானார்: ஆயுள் தண்டனை கைதி 7½ ஆண்டுகளுக்கு பின் கைது


பரோலில் சென்று தலைமறைவானார்: ஆயுள் தண்டனை கைதி 7½ ஆண்டுகளுக்கு பின் கைது
x
தினத்தந்தி 31 July 2018 4:45 AM IST (Updated: 31 July 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

பரோலில் சென்று தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி 7½ ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு,

யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா நாராயணபுராவை சேர்ந்தவர் சையத் யூனிஸ் காத்ரி. இவர் அப்பகுதியை சேர்ந்த பெண்ணை கடத்தி கற்பழித்து கொலை செய்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சையத் யூனிஸ் காத்ரியை கைது செய்து விஜயாப்புரா சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் கடந்த 2002–ம் ஆண்டு நடந்தது.

இதுதொடர்பான வழக்கு யாதகிரி மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த 2010–ம் ஆண்டு கோர்ட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீண்டும் விஜயாப்புரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 2011–ம் ஆண்டு ஜனவரி மாதம் 30 நாட்கள் சையத் யூனிஸ் காத்ரி பரோலில் வெளியே சென்றார். அவர் பரோல் காலம் முடிவடைந்தும் மீண்டும் சிறைக்கும் திரும்பவில்லை. இதுகுறித்து கோல்கும்பாஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் யூனிஸ் காத்ரியை வலைவீசி தேடிவந்தனர். 

இருப்பினும், அவர் பற்றிய எந்த விவரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில், சையத் யூனிஸ் காத்ரி கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா நவனஹள்ளி கிராமத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று அங்கு சென்ற கோல்கும்பாஸ் போலீசார் 7½ ஆண்டுகளுக்கு பின் சையத் யூனிஸ் காத்ரியை கைது செய்தனர்.


Next Story