நிதி மசோதா தாக்கல் செய்வதற்கு நிபந்தனை: கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்


நிதி மசோதா தாக்கல் செய்வதற்கு நிபந்தனை: கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்
x
தினத்தந்தி 31 July 2018 5:00 AM IST (Updated: 31 July 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

நிதி மசோதா தாக்கல் செய்வதற்கு நிபந்தனை விதித்த கவர்னர் கிரண்பெடியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

புதுச்சேரி,

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியும், முதல்–அமைச்சர் நாராயணசாமியும் அவரவர் பதவிக்குரிய மாண்புகளை மறந்து குடுமிப்பிடி சண்டையிட்டு வருகின்றனர். இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத விதத்தில் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் போட முடியாத சூழ்நிலையை இருவரும் உருவாக்கி உள்ளனர். அவர்கள் தங்களது விருப்பு வெறுப்புகளை மக்கள் மத்தியில் தெரிவித்து குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

சட்டமன்ற கூட்டத்தொடரில் துறை வாரியாக நிதி ஒதுக்கீட்டிற்கு எம்.எல்.ஏ.க்கள் விவாதித்து நிறைவேற்றியபின் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கவர்னர் கிரண்பெடி அதற்கு நிபந்தனை விதித்து இருப்பது கேலிக்குறியது. கவர்னரின் இந்த சிறுபிள்ளைத்தனமான செயலை பொருட்படுத்தாமல் சட்டமன்றத்தை கூட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு அரசியலமைப்பு சட்டத்தையே கேலிக்கூத்தாக்கி உள்ளனர்.

அதிகாரத்துக்காக சண்டைபோடும் இவர்கள் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். அவர்கள் புதுவை மாநிலத்தில் செயற்கையான ஒரு தேக்க நிலையை உருவாக்கி விட்டனர். தற்போது சட்டமன்றத்தை கூட்டாததற்கு என்ன காரணம்? என்று சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும். சபாநாயகரிடம் நான் இதுதொடர்பாக கேட்டபோது சரியான பதில் கிடைக்கவில்லை.

நிதி மசோதா தாக்கல் செய்வதற்கு நிபந்தனை விதித்து ஒப்புதல் அளித்த கவர்னரின் செயலை உள்துறை அமைச்சகம் விசாரிக்கவேண்டும். கவர்னர் நிபந்தனை விதித்தது என்பது அதிகார அத்துமீறல். சட்டமன்ற வரலாற்றில் இது மிகப்பெரிய கரும்புள்ளி. இதற்காக மத்திய அரசு முதலில் கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும். இந்த அரசையும் முடக்கவேண்டும். இவ்வளவு பிரச்சினைகள் நடக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி அமைதியாக இருப்பது சரியல்ல.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, புதிய ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்திய பகுதிகளில் அதிக மின்கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டத்தை தம்பு நாயக்கர் வீதியில் ஒரு சிறிய இடத்தில் அதிகாரிகள் நடத்தினார்கள். அதை மின்துறை தலைமை அலுவலகத்தில் நடத்துமாறு கூட்டத்தை நிறுத்தி உள்ளேன் என்றும் தெரிவித்தார்.


Next Story