ஈரோடு ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் செயல்படும் பிளாஸ்டிக் நிறுவனத்தை மூடக்கோரி பொதுமக்கள் மனு


ஈரோடு ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் செயல்படும் பிளாஸ்டிக் நிறுவனத்தை மூடக்கோரி பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 31 July 2018 4:00 AM IST (Updated: 31 July 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு ஒண்டிக்காரன்பாளையம் பகுதியில் செயல்படும் பிளாஸ்டிக் நிறுவனத்தை மூடக்கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

அறச்சலூர் அருகே உள்ள அட்டவணை அனுமன்பள்ளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் 30 குடும்பத்தினர் அட்டவணை அனுமன்பள்ளியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள மயான பகுதியை கடந்த 5 தலைமுறைகளாக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து கொண்டனர். இதனால் இறந்தவர்களை புதைக்க நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே ஆக்கிரமிப்பில் உள்ள மயான இடத்தை மீட்டுத்தர வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில், ஈரோடு ஒண்டிக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

எங்கள் பகுதியில் 200–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் பகுதியில் தனியார் பிளாஸ்டிக் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் நச்சுக்காற்று வீசுகிறது. இதனால் எங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும் கழிவுநீரை அங்குள்ள கிணற்றுக்குள் விடுவதால் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

ஈரோடு சுல்தான்பேட்டை கொங்கலம்மன் கோவில் பகுதியை சேர்ந்த 6 திருநங்கைகள் கொடுத்திருந்த மனுவில், ‘திருநங்கைகளாகிய நாங்கள் மொத்தம் 45 பேர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தோம். கடந்த 15 மாதங்கள் ஆகியும் எங்களுக்கு உதவித்தொகை வரவில்லை. எனவே எங்களுக்கு உடனடியாக உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

கோபி அருகே உள்ள கொளப்பலூர் பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:–

எங்கள் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். தற்போது எங்கள் பகுதியில் சிலர் கோழிப்பண்ணைகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இங்கு கோழிப்பண்ணைகள் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு கொசு தொல்லையும் அதிகரிக்கும். எனவே பொதுமக்கள் நலன்கருதி எங்கள் பகுதியில் கோழிப்பண்ணைகள் அமைக்கக்கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

ஈரோடு வரிசெலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கத்தை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டோர் கையில், ‘சொத்து வரி, வீட்டு வரியை உயர்த்தாதே’ என்ற பதாகையுடன் வந்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், வணிக கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் வரியை உயர்த்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த வரி உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள காகம் மேற்குப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் புறம்போக்கு இடத்தில் உலர் கலம் மற்றும் பொது மயானம் உள்ளது. இந்த இடத்தை சிலருக்கு பட்டா போட்டு கொடுக்க முயற்சி நடந்து வருகிறது. எங்கள் ஊரில் வேறு புறம்போக்கு இடம் இல்லாததால் நாங்கள் தொடர்ந்து இந்த இடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

இதேபோல் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 213 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் விரும்பக்கொடை நிதியில் இருந்து பவானி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.5 ஆயிரத்து 665 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரத்தினையும், 4 மாணவ –மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.10 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினையும், பெருந்துறை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பராமரிப்பு செலவுக்காக ரூ.10 ஆயிரம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினையும் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வழங்கினார்.

கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பத்மஜா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாவதி, மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயராமன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story