சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு
கல்குவாரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த கிராம பெண்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல் உள்பட 242கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் லதா உத்தரவிட்டார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இயற்கையாக மரணமடைந்த 12 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.17ஆயிரம் வீதம் காசோலையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1பயனாளிக்கு விதவை உதவி தொகைக்கான ஆணையும், கலைபண்பாட்டுத்துறை சார்பில் 2016–17–ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 5 கலைஞர்கள் மற்றும் 2017–18–ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட 5 கலைஞர்களுக்கும் சேர்த்து மொத்தம் 10 கலைஞர்களுக்கு விருதுகளை கலெக்டர் லதா வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அனைத்துத் துறை அரசு உயர் அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட செலாளர் சிவசாமி, மாவட்ட துணைச் செயலாளர் வேலாயுதம், நகர செயலாளர் திருமலைசெல்வம் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் லதாவிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:– நல வாரியத்தில் விண்ணப்பித்த 30நாட்களுக்குள் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். ஈமச் சடங்கு உதவி தொகையை உடல் அடக்கம் செய்யும் முன்பு வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூ.5லட்சமும், விபத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு ரூ.10லட்சமும் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக திருப்பத்தூர் அருகே வ.கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 60 பேர் ஒரு வேனில் வந்தனர். அவர்களை போலீசார் சிவகங்கை எல்லையான காஞ்சிரங்கால் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அக்கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட பெண்கள் சுமார் 2கிலோ மீட்டர் தூரம் வரை கலெக்டர் அலுவலகத்திற்கு நடந்து வந்தனர்.பின்னர் அவர்கள்மாவட்ட கலெக்டரிடம் இது குறித்து மனு அளித்தனர்.
இது குறித்து அக்கிராமத்தினர் கூறியதாவது:– எங்கள் கிராமத்தின் அருகே உள்ள கல்குவாரியால் ஏற்படும் பாதிப்பு பற்றி புகார் கூறியதில் இருந்து திருப்பத்தூர் அருகே உள்ள எஸ்.எஸ்.கோட்டை போலீசார் தினமும் வீடுகளுக்கு வந்து வீட்டில் உள்ள ஆண்களை மிரட்டி விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று துன்புறுத்துவது, பொய்யான வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இது குறித்து மனு கொடுக்க வந்தபோது கூட தடுத்து போலீசார் எங்களை மிரட்டுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் லதா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.