மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தை அடுத்த வெள்ளித்திருப்பூர் குறும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 32). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15–ந்தேதி 40 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பஞ்சு குடோனுக்கு சக்திவேல் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த பெண்ணை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த பெண் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர். மேலும் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் அவினாசி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி டிரைவர் சக்திவேலை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்காக வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார்.