கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கொலை


கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 1 Aug 2018 3:00 AM IST (Updated: 31 July 2018 10:23 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

விருத்தாசலம்,


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தத்தை சேர்ந்தவர் தங்கராசு(வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவி பரமேஸ்வரி(33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பரமேஸ்வரிக்கும், கோனூரை சேர்ந்த குருநாதன் மகன் ரவிச்சந்திரன்(38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளகாதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இவர்களது கள்ளக்காதல் பற்றி தெரிந்ததும் பரமேஸ்வரியை தங்கராசு கண்டித்தார். மேலும் அவர், தனது மனைவிடம் இருந்த செல்போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டார். இதனால் பரமேஸ்வரி, தனது கள்ளக்காதலனுடன் பேச முடியாமலும், சந்திக்க முடியாமலும் தவித்தார்.

கணவர் கண்டிப்பையும் மீறி பரமேஸ்வரி, தனது கள்ளக்காதலன் ரவிச்சந்திரனை சந்தித்து பேசினார். அப்போது அவர், தனது கணவர் நமக்கு இடையூராக இருப்பதாகவும், அவரை கொலை செய்தால் நாம் இருவரும் சந்தோ‌ஷமாக வாழலாம் என்றும் கூறி உள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து, தங்கராசுவை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

இந்த திட்டத்தை கடந்த 9.11.2014 அன்று அவர்கள் செயல்படுத்தினர். அன்றைய தினம் இரவு பரமேஸ்வரி, சாப்பாட்டில் தூக்கமாத்திரைகளை கலந்து தங்கராசுக்கு கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் தங்கராசு தூங்கிவிட்டார். இது பற்றி உடனடியாக பரமேஸ்வரி, ரவிச்சந்திரனுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.

அதன்படி ரவிச்சந்திரன், கூலிப்படையான பெண்ணாடத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் ஸ்வீட்லின்(27), கடலூரை சேர்ந்த குப்புராமன் மகன் ஞானமூர்த்தி(34), கண்ணன் மகன் கார்த்திகேயன்(29), விருத்தாசலம் நகராட்சியில் ஊழியரான கடலூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நரேஷ்குமார்(24), பெண்ணாடத்தை சேர்ந்த ராஜூ மகன் ரமேஷ்(35), புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த அஜிஸ்ராஜ் மகன் ஆல்பர்ட் என்கிற விஜி(27), கடலூர் மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த சங்கர் மகன் சிலம்பரசன்(28), அரியராவியைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் அருள் என்கிறற அருள்செல்வன்(35) ஆகியோருடன் தங்கராசு வீட்டுக்கு வந்தனர்.

அங்கு தூங்கிக்கொண்டிருந்த தங்கராசுவின் முகத்தில் தலையணையால் அழுத்தினர். மேலும் கத்தியால் சரமாரியாக வெட்டி, அவரை கொலை செய்தனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமேஸ்வரி, ரவிச்சந்திரன் உள்பட 10 பேரை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விருத்தாசலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பு கூறினார்.

தங்கராசுவை கொலை செய்த பரமேஸ்வரி, ரவிச்சந்திரன் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ஆயிரம் ரூபாய் அபராதமும், ஸ்வீட்லின், ஞானமூர்த்தி, கார்த்திகேயன், நரேஷ்குமார் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் ரமேஷ், ஆல்பர்ட், சிலம்பரசன், அருள் ஆகிய 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் விஜயகுமார் ஆஜரானார்.


Next Story