மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்தில் ரூ.5 கோடியில் சர்வதேச நீச்சல் குளம் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்தில் ரூ.5 கோடியில் சர்வதேச நீச்சல் குளம் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்
x
தினத்தந்தி 31 July 2018 10:15 PM GMT (Updated: 2018-07-31T23:29:28+05:30)

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்தில் ரூ.5 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் கட்டப்படும் நீச்சல் குளத்துக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.

நெல்லை,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்தில் ரூ.5 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் கட்டப்படும் நீச்சல் குளத்துக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.

ரூ.5 கோடியில் நீச்சல் குளம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோடு பாத்திமா கோவில் அருகே 175 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 12½ ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்துடன் ரூ.5 கோடி மதிப்பில் புதிய நீச்சல் குளம் கட்டப்படுகிறது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது.

விழாவுக்கு, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர்.

அப்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:–

தமிழகம் முதலிடம் வகிக்கிறது

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 கோடி செலவில் சர்வதேச தரத்தில் புதிய நீச்சல்குளம் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி இன்று (அதாவது நேற்று) அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நீச்சல் குளத்தில் பயிற்சி நீச்சல் குளம், உடற்பயிற்சி குளம், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்டவைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான நிதி தமிழக அரசு நிதியாகும்.

உயர்கல்வி துறையை பொறுத்த வரையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் 506 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்து 74 ஆயிரம் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. செப்டம்பர் 1–ந்தேதி என்ஜினீயரிங் கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக கோர்ட்டில் நாங்கள் அனுமதி பெற்றுவிட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான மனோஜ் பாண்டியன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன், பொருளாளர் தச்சை கணேசராஜா, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story